போர் நிறுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்து, புலிகளிற்கு எதிரான யுத்தத்திற்கு உபாய முறையாக மட்டுமே பயன்படுத்தினோம். அதற்காக அவருக்கு கட்சியில் உப தவிசாளர் பதவியினையோ அமைச்சு பதவியினையோ வழங்கவில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி முக்கிய உறுப்பினர்கள் பலர் இன்று தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அவரது இல்லத்தில் சந்தித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்.
இதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் கூறுகையில்,
ஓரிரவில் மூவாயிரம் படையினரை கொன்று குவித்ததாக கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை பாதுகாக்கவே இவ்வாறானதொரு கருத்தினை தெரிவித்துள்ளார். இதனால் இராணுவ குடும்பங்கள் குழப்பமடைந்துள்ளன.
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் போது விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்தோம். இதன் பின்னர் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக கருணாவை உபாய முறையாக பயன்படுத்தினோம். அதற்காக அவருக்கு ஐக்கிய தேசிய கட்சியில் உப தவிசாளர் பதவியினையோ அமைச்சு பதவியினையோ வழங்கி உள்வாங்க வில்லை என தெரிவித்தார்.