பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து,
அவர்கள் மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதிஅந்த சிறையில் அடைக்கப்பட்டனர்.
சசிகலாவுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத்தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலும் ஓராண்டு அவர் சிறையில் இருக்க வேண்டும்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 1997-ம் ஆண்டு 13 நாட்கள் சென்னை சிறையிலும், கடந்த 2014-ம் ஆண்டு 24 நாட்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலும் இருந்தார். இரண்டையும் சேர்த்தால், 37 நாட்கள் ஆகிறது. அவரது தண்டனை காலத்தில் இந்த 37 நாட்கள் கழிக்கப்பட்டுவிடும்.
மேலும் ஆண்டுக்கு சுமார் ஒரு மாதம் தண்டனை கைதிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
அந்த விடுமுறை, தண்டனை காலத்தில் கழிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் சசிகலாவின் 4 ஆண்டு சிறை தண்டணைக்கு, 4 மாதங்கள் கழிக்கப்படும்.
இந்த 4 மாத விடுமுறை, ஏற்கனவே சுமார் ஒரு மாதம் சிறையில் இருந்தது என 5 மாதங்கள் தண்டனை காலத்தில் கழிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இது மட்டுமின்றி, சிறை சூப்பிரண்டு, தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தண்டனை கைதிகளுக்கு அதிகபட்சமாக 2 மாதங்கள் வரை தண்டனை காலத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.