சபரிமலை ஐயப்பன் கோவிலில் ரூ.75 ஆயிரம் கட்டணத்தில் படி பூஜை நடத்தப்படுகிறது. அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜைக்கு 2033-ம் ஆண்டு வரை முன் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் படிபூஜை நடத்தப்படுவது இல்லை. மகர விளக்கு பூஜை முடிந்த பின் 4 நாட்கள் மற்றும் மாத பூஜைக்காக நடை திறக்கப்படும் நாட்களிலும் படிபூஜை நடத்தப்படுகிறது.
2017-ம் ஆண்டுக்கான படிபூஜை ஜனவரி 16-ந் தேதி தொடங்குகிறது. 19-ந் தேதி வரை 4 நாட்கள் ஐயப்பன் கோவிலில் மாலை 6.30 மணிக்கு தீபாராதனைக்கு பின்னர் படிபூஜை நடைபெறும். இந்த பூஜை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நடைபெறுகிறது.
இந்த பூஜையின் போது 10 பேர் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்னதாக படிகளில் பட்டு துணி விரிக்கப்பட்டு, ஒவ்வொரு படியிலும் விளக்கில் தீபம் ஏற்றி, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடத்தப்படும். பூஜையின் போது 18-ம் படி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
ஐயப்பன் சிலை மற்றும் கோவிலை சுற்றி மலர்களாலும், வண்ண வண்ண பூக்களாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்படும். இந்த மலர் அலங்காரத்திற்கு ரூ.50 ஆயிரம் கட்டணமாகும். இந்த வழிபாட்டின்போது 5 பேர் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அலங்காரத்திற்கான பூக்களை திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் வழங்கும்.
ஐயப்பனுக்கு 1000 குடங்களில் தீர்த்தம் மூலம் அபிஷேகம் செய்யப்படும் சகஸ்ர கலச பூஜைக்கு ரூ.40 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே போல் உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரமும், புஷ்பாபிஷேகத்திற்கு ரூ.10 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.