முயற்சி திருவினையாக்கும் என கூறுவார்கள். ஆனால் இந்த பழமொழி குழந்தைகளின் விடயத்தில் மாத்திரம் செல்லுபடியாகாது என சில பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
காரணம் குழந்தைகளின் பிடிவாதம். ஆனால் உண்மையை கூறவேண்டுமென்றால் பிடிவாதமில்லாத குழந்தைகளே இந்த உலகில் இல்லை.
இதனை சமாளிக்கும் பொறுப்பு பெற்றோரின் கைகளில் தான் உண்டு. சிலருக்கு குழந்தைகளை சமாளிக்கும் வித்தை நன்றாக தெரியும்.
ஆனால் இன்னும் சிலர் குழந்தைகளை சமாளிப்பதாக கூறி அவர்களது பிடிவாத்தை எதிர்காலத்தில் அதிகமாக்கும் செயற்பாட்டிற்கு துணை நிற்கிறார்கள்.
உதாரணமாக குழந்தை ஏதாவது ஒரு பொருளை கேட்டு அடம் பிடிக்கும் போது உடனே அதனை கொடுத்துவிடக் கூடாது. சற்று தாமதமாகியே அதனை வழங்க வேண்டும். இதனால் குழந்தைக்கு சிறு தோல்வி ஏற்படும்.
இந்த தோல்வி அவர்களை நாளை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். இவ்வாறான தோல்வியின் மூலம் குழந்தைகளின் பிடிவாதம் குறையும் வாய்ப்பு இருக்கிறது.
குழந்தை ஏதாவது ஒரு பொருளையோ அல்லது ஒரு விடயத்தை செய்து தருமாறு கேட்டால் முதலில் அந்த விடயமோ அல்லது பொருளோ அவர்களுக்கு தேவையா என்பதை பெற்றோர்கள் முதலில் சிந்திக்க வேண்டும்.
அப்படி அது அவர்களுக்கு தேவையான ஒன்றாக இருப்பின் அதனை வழங்கலாம். ஆனால் அதனையும் சற்று தாமதித்தே வழங்க வேண்டும்.
அவர்களுக்கு தேவையற்ற, விடயத்தை செய்யுமாறு அல்லது பொருளை தருமாறு அவர்கள் கேட்டால் உறுதியாக முடியாது என்று சொல்ல வேண்டும்.
இதனால் அவர்கள் அடம்பிடிப்பார்கள். இதில் தான் இருக்கிறது பெற்றோரின் சாமர்த்தியம்.
இவ்வாறான நேரத்தில் அவர்களை திசைதிருப்ப வேண்டும். வேறு ஏதாவது விடயங்களை கூறி அவர்களது எண்ணத்தினை முற்றிலுமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
இதன் மூலம் குழந்தைகள் எதை மனதில் உறுதியாக நினைத்து வைத்திருந்தார்களோ அதனை இலகுவாக மறந்து விடுவார்கள்.
இதனை விடுத்து அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க துவங்கிவிட்டால் எது கேட்டாலும் கிடைக்கும் என்ற நினைப்பு குழந்தையின் மனதில் வேர்விடத்துவங்கி விடும்.
அதற்காக குழந்தைகளை அடிக்கவோ, மிரட்டவோ கூடாது. இதனால் அவர்களது மனதில் கோபம் அதிகரிக்கும். இதன் விளைவு தான் அதிக பிடிவாதம்.
குழந்தைகளை உங்களது வழிக்கு கொண்டவர வேண்டுமென்றால் அவர்களுடன் நண்பர்களாக பழக வேண்டும்.
பாடங்களை சொல்லிக் கொடுப்பதன் மூலம் சிறந்த நட்பு ரீதியான சூழலை குழந்தைகளுடன் பெற்றோர் உருவாக்கிக் கொள்ள முடியும்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நல்ல பழக்கவழக்கங்களை உணர்த்தும் கதைகளை அவர்களுக்கு சொல்ல வேண்டும்.
இவ்வாறு நீங்கள் குழந்தைகளோடு பழக ஆரம்பித்து விட்டால் நீங்கள் கூறும் எதையும் அவர்கள் கேட்பார்கள்.