பிரித்தானியாவில் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்கள் மீது கும்பல்களால் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக உள்விவகார அமைச்சகம் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாத சம்பவங்களின் போது பொதுமக்கள் தங்கள் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு ஒத்திகை பார்க்குமாறும் உள்விவகார அலுவலகம் அறிவுரைகளை மீண்டும் வெளியிட்டுள்ளது.
2017 மற்றும் 2018 காலகட்டங்களில் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தலானது தற்போது அரசாங்க இணைய பக்கத்தில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
ரீடிங் நகரில் மூவர் கத்தியால் தாக்கி கொல்லப்பட்ட நிலையில் இதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, அடுத்த சில வாரங்களில் தனித்த தாக்குதல் சம்பவங்கள் முன்னெடுக்கப்படலாம் என ப்ரிதி பட்டேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல்தாரி புகுந்து கொடூரமாக அதிக வேகத்தில் தாக்குதலை முன்னெடுக்கலாம் எனவும், மட்டுமின்றி அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதல்கள் திட்டமிடப்படலாம் எனவும் ப்ரிதி பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.
அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், மோசமான பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக உங்கள் அமைப்பைப் பாதுகாப்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சவாலான பணியாகும்.
இருப்பினும், நன்கு திட்டமிடப்பட்ட நடைமுறைகள், பாதுகாப்பு அம்சங்கள், பயிற்சி மற்றும் ஒத்திகை மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலானது இந்த ஆலோசனை அலுவலகங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்று கூறப்படுகிறது, இருப்பினும் திரையரங்குகள், வணிக மையங்கள் மற்றும் விளையாட்டு அரங்கங்களுக்கும் இது பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த வாரம் ஜூன் 20 அன்று ரீடிங் நகர பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட மூன்று கொலைகள் மற்றும் மூன்று கொலை முயற்சிகள் தொடர்பில் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் கைரி சதல்லா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.