பாடசாலைகள் மீள ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக, சிரமதானம் செய்வதென்கென மாணவர்களை அழைத்த பாடசாலை அதிபர் ஒருவரால், மாணவி துஷ்பிரேயோகம் செய்யப்பட்டுள்ளார் என குற்றம்சாட்டப்பட்டது.
14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர், நேற்று (29) அதிபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
ராகலையிலுள்ள தோட்ட பாடசாலையொன்றில் சில தினங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்தது.
பாடசாலையின் சிரமதானப் பணிகளிற்காக மாணவர்கள் அழைக்கப்பட்டதாகவும், சிரமதானம் முடிந்த பின்னர் தரம் 7ஐ சேர்ந்த ஒரு மாணவி மட்டும் அதிபரினால் தடுத்து வைக்கப்பட்டு, பாலியல் துஷ்பிரயோ கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என குற்றம்சாட்டப்படுகிறது.
தனது வீட்டில் மாணவி தகவல் தெரிவித்ததையடுத்து, பெற்றோர் இது குறித்து முறைப்பாடு செய்தனர்.
இதையடுத்து அதிபர் கைது செய்யப்பட்டு கடந்த 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நுவரெலியா நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாணவி மேலதிக பரிசோதனைகளிற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த பரிசோதனை அறிக்கைகளை பெற்று, நேற்று வழக்கு மீள அழைக்கப்பட்ட போது, பொலிசாரால் சமர்ப்பிக்கப்பட்டது. பாடசாலையிலிருந்து அதிபரை இடமாற்றம் செய்ய, சில தரப்பினரால் சோடிக்கப்பட்ட வழக்கு இது என அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சமர்ப்பணம் செய்தார்.
அதிபரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
அதிபர் மீது ஒரு தரப்பு குற்றம்சாட்ட, சோடிக்கப்பட்ட வழக்கென அதிபர் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வைத்திய பரிசோதனை அறிக்கையின்அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.