அரந்தலாவ பகுதியில் 33 பௌத்த பிக்குகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் இன்று (30) அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென மனுவில் கோரப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பௌத்த பிக்கு ஒருவர் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாக்குதலில் ஈடுபட்டு தற்போது எஞ்சியுள்ள அங்கத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும், தனக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டுமென மனுவில் கோரப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர், பதில் காவல்த்துறை மா அதிபர், தேசிய புலனாய்வு பிரிவு இயக்குனர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பாறை, அரந்தலாவ பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 31 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 33 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் மீது அரச தரப்பு குற்றம்சாட்டியது. ஆனால் புலிகள் இந்த தாக்குதலை உரிமை கோரவில்லை.