ஈரானின் முக்கிய இராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி உள்ளிட்ட இராணுவ வீரர்களை ட்ரோன் மூலம் கொலை செய்த விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட 30 பேரைக் கைது செய்ய ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டு, இன்டர்போல் உதவியை நாடியுள்ளது.
கடந்த ஜனவரி 3ஆம் திகதி பாக்தாத்தில் ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமானி, துணைத் தளபதி அபு மெஹதி முஹென்திஸ் உள்ளிட்ட இராணுவ வீரர்களை அமெரிக்காவின் ஆள் இல்லாத இராணுவ விமானம் குண்டுவீசித் தாக்கியது. இதில் சுலைமானி உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.
இந்த விவகாரத்தில் பழிக்குப் பழி வாங்குவோம் என்று முழக்கமிட்ட ஈரான் அரசு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை தீவிரவாதியாக அறிவித்தது. மேலும், பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் ஈரான் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட இராணுவத்தினரைக் கொலை செய்ததில் 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்பதை ஈரான் இராணுவம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து, ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட 40 பேரைக் கைது செய்ய ரெட் கோர்னர் நோட்டீஸ் அனுப்பி ஈரான் நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதுகுறித்து டெஹ்ரான் அரசு வழக்கறிஞர் அலி அல்குவாஸிமெஹர் கூறுகையில், “ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட இராணுவத்தினரைக் கடந்த ஜனவரி 3ஆம் திகதி பாக்தாத்தில் அமெரிக்க இராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் குண்டுவீசித் தாக்கிக் கொன்றது. இந்தக் கொலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளோம்.
அதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இன்டர்போல் உதவியையும் நாட ரெட் கோர்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளது. ட்ரம்ப் மீது தீவிரவாதம் மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப் தவிர மற்றவர்கள் யார் என்பது குறித்து ஈரான் அரசு வெளியிடவில்லை.
இதுகுறித்து இன்டர்போல் வெளியிட்ட அறிக்கையில், “அரசியல்ரீதியாக, மதரீதியாக எந்தவிதமான நடவடிக்கையையும் யாருக்கு எதிராகவும் எடுக்க முடியாது. பொதுவாக இதுபோன்ற கோரிக்கைகளை ஈரான் கருத்தில்கொள்ளாது. இதற்கு உதவ முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது.