தம்புள்ளை – இஹல எரேவுல்ல பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல எரேவுல்ல பகுதியில் கடந்த மாதம் 18 ஆம் திகதி விவசாயத்திற்காக நீர் சேமித்துவைக்கும் ஐந்து அடி ஆழமான கிணறு ஒன்றில் டயர் இட்டு எரிக்கப்பட்ட நிலையில் மனித எலும்புகள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவந்த மாத்தளை குற்றப் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர்கள் மூன்று பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது மொரகாஹேன – மில்லெவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
உயிரிழந்த நபரின் மனைவியுடன் தொடர்பை பேணிவந்த நபரொருவரே இந்த கொலையை செய்துள்ளதுடன் , குறித்த சந்தேக நபரும் அவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய மேலும் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்கரெல்ல , மாபிடிகம மற்றும் ஓப்பநாயக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 – 40 ஆகிய வயதுக்கிடைப்பட்ட மூன்றுபேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கொலைச் செய்வதற்காக பயன்படுத்திய டிப்பர் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபர்களை தம்புள்ளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய பொலிஸார் நாளை புதன்கிழமை வரை அவர்களை தடுப்புகாவலில் வைத்து விசாரணைகளை நடுத்துவதற்காக அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.