ஆண்டவர் நமக்கு அவருடைய குணாதிசயத்தைப் போதிக்கிறார். அதாவது, நம் முடைய லாபங்களை விட நஷ்டங்களினாலும், சுய பாதுகாப்பை விட தியாகங் களினாலும் சொந்த நலனுக்காகச் செலவிடப்படும் நேரத்தைக் விட மற்றவர்களுக்காகச் செலவிடப்படும் நேரங்களினாலும் மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் அன்பை விட மற்றவர்களுக்குக் கொடுக்கும் அன்பினாலும் நம்முடைய வாழ்க்கையை அளக்க வேண்டும் என்பது தான் அந்தப் போதனை.
நாம் கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது நம்முடைய வாழ்க்கையை வீணாக்குவதாக மக்கள் நினைக்கக் கூடும்.
ஆனால் நம்முடைய உயிரை இழக்கும் போது கிறிஸ்துவுக்குள் முடிவில்லா வாழ்வைக் கண்டடைய முடியும் என்பதை அறியும் போது நாம் இழப்பதில்லை, பெறுகிறோம்.
ஒரு விவசாயி தன்னுடைய வயலில் விதை விதைக்கும் போது அவற்றை அவன் பூமியில் வீசி எறிவது போல நமது பார்வைக்கு தெரியும். அவன் விதைகளை வீணாக்குவது போல நமக்குத் தோன்றலாம். ஆனால் அது முளைத்து வளர்கிறது. நாளடைவில் அது பலன் கொடுக்கும் போது அதன் மிகுதியை அறிந்து கொள்ள முடிகிறது.
உலகம் மிகப்பெரிய தேவையை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. சீரழிந்து கொண்டிருக்கும் நம்முடைய உலகத்தில் கடவுள் ஏன் குறுக்கிட்டு அதைச் சீர் படுத்தக் கூடாது என்றும், மனமுடைந்திருக்கும் மக்களுக்கு அவர் ஏன் ஆறுதல் அளிக்கக் கூடாது என்றும் நம்மில் பலர் நினைக்கின்றனர்.
ஆனால் அவர் ஏற்கனவே குறுக்கிட்டிருக்கிறார். தன்னுடைய மகன் இயேசு கிறிஸ்து வழியாக அவர் உலகில் குறுக்கிட்டுள்ளார்.
ஆண்டவரின் வார்த்தை நம்முடைய வாழ்வில் குறுக்கிடுகிற ஒன்று. ஆண்டவர் தன்னுடைய வார்த்தைகளினால் மனித வாழ்வில் குறுக்கிட்டுக் கொண்டே இருக்கிறார்.
என் வாழ்வில் நான் விரும்பியதைச் செய்ய எனக்கு உரிமை உண்டு. ஆனால் நான் செய்யும் செயலைக் குறுக்கிடவும், அதை தம்முடைய குறுக்கீடுகளால் மாற்றவும் இயேசுவுக்கும் அவருடைய வார்த்தைகளுக்கும் அதிகாரம் உண்டு.
இயேசுவின் வார்த்தை குறுக்கிட்ட இரண்டு மனிதர்களைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை அடைந்த மாற்றத்தைப் பற்றியும் பார்ப்போம்.
சீமோன்
இயேசு சீமோனை நோக்கி, ‘ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்’ என்றார். சீமோன் மறுமொழியாக, ‘ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்’ என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள்’ (லூக்கா 5:4)
மீன் பிடித்துக் கொண்டிருந்த சீமோன் இரவு முழுதும் கடின உழைப்பைச் சிந்தினார். ஆனாலும் மீன்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. கவலையுடன் வலைகளை அலசிக் கொண்டிருந்த போது ஆண்டவர் இயேசு தன்னுடைய வார்த்தைகளினால் குறுக்கிடு கிறார்.
இந்தக் குறுக்கீடு மாற்றத்துக்கு நேரான குறுக்கீடு. இரவு முழுவதும் கடினமாய் உழைத்தும் ஒன்றும் அகப்படவில்லையே, பாவம் மிகுதியாக மீன்களைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியோடு வீட்டுக்குப் போகட்டும் என்பதோடு இந்தக் குறுக்கீடு முடிந்து விடவில்லை.
சீமோனை நோக்கி, ‘அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்’ என்று சொன்னார் என்கிறது லூக்கா 5:10.
ஆண்டவரின் வார்த்தை நம் வாழ்வில், செயல்பாட்டில், தன்னுடைய சித்தத்தை நிறைவேற்றிக் கொள்ளவே இந்த குறுக்கீடு.
நம் தேவை சந்திக்கப்படுவதற்கான குறுக்கீடு மாற்றம் அல்ல. மற்றவர்களின் தேவை சந்திக்கப்படுவதற்கான குறுக்கீடு தான் மாற்றம்.
சக்கேவு
சக்கேயு குள்ளமான மனிதர். ‘பாவி’ என மக்களால் அழைக்கப்பட்டவர். இயேசுவைக் காண வேண்டும் எனும் ஆவலினால் காட்டு அத்தி மரத்தின் மேல் ஏறி நின்று இயேசு வரும் வழியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அங்கே இயேசு வருகிறார். மரத்தின் அருகே நிற்கிறார். அண்ணாந்து பார்த்து, ‘சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்’ என இயேசு சக்கேவைப் பார்த்துச் சொன்னார். (லூக்கா 19:5)
இந்த ஆண்டவரின் வார்த்தைகள் மாற்றத்துக்கு நேரான, உலகத்தில் ஆண்டவரை அறியாத அனேகருக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய, அங்கீகாரம் வழங்கக் கூடிய வார்த்தைகள்.
சக்கேயுவை கீழே இறங்கி வர அழைத்த அந்த ஆண்டவரின் வார்த்தைகள் சக்கே வின் வாழ்வில் மாற்றத்திற்கு நேரான குறுக்கீடு. சுற்றி நின்றிருந்த அநேகருடைய வாழ்க்கைக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய குறுக்கீடு. மனந்திரும்புகின்ற பாவிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடிய குறுக்கீடு.
‘இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்’ (லூக்கா 19:9) என்றார் இயேசு.
ஆண்டவர் இயேசுவின் பிறப்பு, திருப்பணி, சிலுவை, மரணம், மற்றும் உயிர்த்தெழுதல் அனைத்தின் மூலமாகவும் இவ்வுலக மக்களின் வாழ்வில் இயேசு குறுக்கிடுகிறார்.
இன்றும் ஆண்டவரின் வார்த்தைகள் மனித வாழ்வில் குறுக்கிடுகிறது. இக்குறுக்கீடு சமய மாற்றத்திற்கு நேரானதல்ல, முழு மனுக்குலமும் நிறை வாழ்வை நோக்கிய பயணம் செய்வதற்கான குறுக்கீடு.
உயிருள்ள ஆன்டவர் இயேசுவின் வார்த்தைகள் உங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் நிறைவாழ்வைப் பெற்றுத் தருவதாக, ஆமென்.