கிழக்கு லடாக் எல்லையில் சீனா, இந்தியா ராணுவ மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவுகையில் லடாக்கின் லே பகுதிக்கு இன்று காலை பிரதமர் மோடி திடீரென பயணம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடியுடன் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி விபின் ராவத், ராணுவ அதிகாரிகள் உடன் சென்றனர். கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லே பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுடன் உரையாடி, அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார்.
கடந்த மாதம் 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய – சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் பாதுகாப்பை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது. சீன ராணுவமும் எல்லையில் ராணுவத்தைக் குவித்து வருகிறது.
இரு நாட்டு ராணுவத்தின் கமாண்டர்கள் அளவில் இதுவரை 3 சுற்றுகளாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எல்லையில் அமைதியாக இரு தரப்பு ராணுவ வீரர்களும இருந்தாலும் பதற்றமான சூழல் குறையவில்லை.
இந்தச் சூழலில் பிரதமர் மோடி தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத், தரைப்படைத் தளபதி எம்எம் நரவானே ஆகியோருடன் இன்று காலை லடாக் சென்றடைந்தார். தரைமட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் லே பகுதி, நிமு பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார்.
அதுமட்டுமல்லாமல் நிமு பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், இந்தோ-திபெத் படை வீரர்கள் ஆகியோருடன் உரையாடிய பிரதமர் மோடி அவர்களுக்கு உற்சாகமூட்டினார்.
கிழக்கு லடாக் எல்லையில் சீன- இந்திய ராணுவம் மோதலுக்குப்பின் லடாக் பகுதிக்கு முதல் முறையாக பிரதமர் மோடி திடீரென சென்றுள்ளார். லடாக்கிற்கு இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்ல வேண்டிய திட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் நிமு பகுதியில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.