அல்ஜீரிய யுத்தத்தில் பிரெஞ்சுப்படைகளால் கொல்லப்பட்ட முக்கிய போராளிகள் 24 பேரின் உடல் எச்சங்களை பிரான்ஸ் அரசு அந்நாட்டிடம் திருப்பி ஒப்படைத்துள்ளது.
19 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின்போது பிரெஞ்சு எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த அல்ஜீரிய போராளிகள் பலர் பிரெஞ்சுப்படைகளால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
1849 இல் பிரெஞ்சு படைகளால் பிடித்துக் கொல்லப்பட்ட பின்னர் தலை துண்டிக்கப்பட்ட முக்கிய அல்ஜீரியப் போராளி ஷேக் பூஜியன், பௌ அமர் பென் கெடிடா, மொக்தர் பென் கௌடர் உள்ளிட்டவர்களின் எச்சங்கள் உட்பட 24 பேரது உடற்பகுதிகள் விசேட விமானம் ஒன்றில் அல்ஜீரியாவுக்கு எடுத்து வரப்பட்டன.
அல்ஜீரிய போராளிகளது இந்த எச்சங்கள் இதுவரை பிரான்ஸின் Musee de l’Homme தேசிய அருங்காட்சியகத்தில் பேணிப்பாது காக்கப்பட்டு வந்தன. அவற்றை அல்ஜீரியாவிடம் மீள ஒப்படைக்குமாறு மனித உரிமையாளர்களும் கல்வியியலாளர்களும் நீண்ட காலமாக கோரிவந்தனர்.
132 ஆண்டுகள் பிரான்ஸின் காலனியாக இருந்துவந்த அல்ஜீரியா இறுதியாக எட்டு ஆண்டுகள் நீடித்த கடும் போரின் முடிவில் 1962 இல் சுதந்திரம் பெற்றது. இந்தப்போரில் 1.5 மில்லியன் அல்ஜீரிய மக்கள் கொல்லப்பட்டனர்.
தலைமக்ரோன் 2017 இல் தனது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்களின்போது, அல்ஜீரியா மீதான பிரெஞ்சு நாட்டின் காலனி ஆதிக்கத்தை ‘மனித குலத்துக்கு எதிரான குற்றம்’ என்று கூறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் அதே ஆண்டில் அல்ஜீரியாவுக்கு விஜயம் செய்த அவர், ஒரு ‘நண்பனாக’ வந்திருப்பதாக அங்கு வைத்து அறிவித்திருந்தார். அத்துடன், அல்ஜீரிய போராளிகளின் உடல் எச்சங்களை திரும்ப ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.
பிரெஞ்சு நாட்டின் அரசுத் தலைவர்களில் அல்ஜீரிய யுத்த காலத்துக்கு பின்னர் பிறந்த முதல் ஜனாதிபதி மக்ரோன் ஆவார்.