இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை பரிசோதனைகள் அதிகரிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிகபட்ச பாசிட்டிவ் தொற்றுகள் இதுவாகும்.
கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் பலியாக, இந்தியாவில் கரோனா பலி எண்ணிக்கை 18,655 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்து 315 ஆக உள்ளது, என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 94 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 2 லட்சத்து 35 ஆயிரத்து 433 பேர் கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதாவது குணமடைந்தோர் விகிதம் 60.80% ஆக அதிகரித்துள்ளது. உறுதி செய்யப்பட்ட மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அயல்நாட்டினரும் உண்டு.
கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 442 கரோனா மரணங்களில் மகாராஷ்ட்ராவில் 198 பேரும் தமிழகத்தில் 64 பேரும் டெல்லியில் 59 பேரும், கர்நாடகாவில் 21 பேரும், குஜராத், மேற்கு வங்கத்தில் 18 பேரும், உ.பியில் 14 பேரும், ராஜஸ்தானில் 10 பேரும் ஆந்திரா, தெலங்கானாவில் முறையே 8 பேரும், பஞ்சாபில் 5 பேரும் ஹரியாணா, ம.பியில் முறையே 4 பேரும், ஜம்மு காஷ்மீரில் 4 பேரும், பிஹாரில் 3 பேரும், அசாம் மற்றும் ஒடிசாவில் முறையே 2 பேரும் மரணமடைந்துள்ளனர்.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.