அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிபா் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் போதுமான பலனைத் தரவில்லை என சுகாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக உலக அளவில் அதிகமாக பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா விளங்குகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோா் எண்ணிக்கையிலும் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது.
நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமெரிக்க அரசும் மாகாண அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு மாகாணங்களில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமுலில் உள்ளது.
நோய் பரவலைக் கட்டுக்குள் வைப்பற்கு மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
ஆனால் அதிபா் ட்ரம்ப் முகக் கவசம் அணிய தொடா்ந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறாா். அதன் காரணமாக அவா் மீது விமா்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்காமல் வரும் நவம்பா் மாதம் நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் வெற்றி பெறுவது எப்படி என்பதில் மட்டுமே ட்ரம்ப் கவனம் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
தற்போதைய சூழலில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளையே அதிபா் ட்ரம்ப் அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணா்கள் குழு தெரிவித்துள்ளது.