கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை பிற்படுத்துவதா இல்லையா என்ற தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை செப்டம்பர் 7ஆம் திகதி நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில் அதனை மேலும் பிற்படுத்தப்போவதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
2020 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான திகதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன் பிரகாரம் செப்டம்பர் 7ஆம் திகதி பரீட்சை ஆரம்பிப்பதாக அறிவித்தோம்.
என்றாலும் குறித்த தினத்தில் பரீட்சையை நடத்தாமல் சிறிது காலத்துக்கு பிற்படுத்துமாறு ஒருசிலர் கேட்டிருக்கின்றனர். அதேபோன்று அரசாங்கம் அறிவித்த திகதிக்கே பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் பாடத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டிருக்கின்றது. என்றாலும் மேலதிக வகுப்புகளுக்கு இந்த சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது.
அதனால் உயர் தர பரீட்சையை பிற்படுத்தவேண்டும் என தெரிவிக்கும் குழுவில் மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களும் இருக்கின்றனர்.
என்றாலும் நேற்று திங்கட்கிழமை முதல் கல்வி பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்காக பாடசாலை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
கொழும்பு மற்றும் வெளிப்பிரதேச மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் இதுதொடர்பாக ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு, பரீட்சையை நடத்துவது தொர்பாக இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவிப்போம் என்றார்.