யாழ். நகரிலும் அண்டிய பகுதிகளிலும் பெற்றோல் கேட்டு மோசடி செய்யும் நபர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மோசடியை இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளம் ஊடாக வெளிக்கொண்டு வந்துள்ளார்.
அனைவரதும் விழிப்புணர்வுக்காகவும், குறித்த மோசடி நபர்களிடம் மீண்டும் ஏமாறாமல் இருக்கவும் இங்கே பதிவிடப்படுகிறது.
அந்தப் பதிவு வருமாறு,
கடந்த ஞாயிறு கஸ்தூரியாா் வீதியால் மோட்டா் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது யாழ்.இந்துக்கல்லூரி மைதான பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் ஆட்டோ ஒன்றை நிறுத்தி வைத்திருந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் என்னை மறித்து ஆட்டோ பெற்றோல் இல்லாமல் நின்று விட்டதாகவும் பெற்றோல் வாங்க பணம் தருமாறும், தான் பிறகு அதை றீலோட் செய்து விடுவதாகவும் என்னிடம் கேட்டார்.
பின்னா் 3 நாட்கள் கழித்து அதே இளைஞா் யாழ்.பலாலி வீதி தபாற்பெட்டிச் சந்திக்கு அருகில் ஆச்சி உணவக வாசலில் ஒரு பள்சா் ரக மோட்டா்ரசைக்களில் நிற்க ஒரு கால் இல்லாத இன்னுமொரு 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞா் கையில் ஒரு வெற்று சோடாப் போத்தலை வைத்துக் கொண்டு வீதியில் போவோரை மறித்து மோட்டா் சைக்கிளுக்கு பெற்றோல் முடிந்துவிட்டதாகவும் பெற்றோல் வாங்க பணம் தருமாறும் கேட்டுக் கொண்டிருந்தாா்.
அவசரமாக சென்று கொண்டிருந்ததால் அதை கவனிக்காமல் சென்று விட்டேன். கொஞ்சம் தூரம் தள்ளிப் போகவே இவர்கள் தான் அன்றும் பணம் கேட்டார்கள் என்பது ஞாபகம் வந்தது.
பின்னா் இன்று மீண்டும் இரவு 8 மணியளவில் பலாலி வீதியில் அதே இடத்தில் ஆச்சி உணவகத்திற்கு எதிரே ஆட்டோவை நிறுத்திவிட்டு ஆட்டோ சாரதி ஆசனத்தில் அதே இளைஞர் இருக்க மற்றைய கால் இல்லாத இளைஞர் வீதியால் வருவோரிடம் பெற்றோல் முடிந்துவிட்டது பணம் தருமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
வீதியால் வந்த ஒரு ஐயாவை மறித்து அவரிடம் பெற்றோலுக்கு பணம் கேட்க அவரும் அதைக் கொடுக்கத் தயாரான போது நான் அவ்விடத்தில் மோட்டா் சைக்கிளை நிறுத்தி நீங்கள் தானே போன கிழமை என்னிடம் பணம் கேட்டீா்கள்? என்று கேட்க அவா்கள் தூசணத்தால் பேசிவிட்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனா்.