விஷால் தன்னுடைய ‘விஷால் பிலிம் பேக்டரி(VFF)’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தன்னுடைய படங்களை தயாரித்து வருகிறார். தற்போது துப்பறிவாளன் 2 மற்றும் சக்ரா ஆகிய படங்கள் இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதையடுத்து, சமீபத்தில் VFF நிறுவனத்தின் மேனேஜர் ஹரி என்பவர் போலீசில் அளித்த புகாரில் இந்த நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த ரம்யா என்ற பெண் சுமார் ரூ.45 லட்சத்தை முறைகேடாக தனது உறவினர் வங்கிக்கணக்கில் மாற்றிக்கொண்டு தலைமறைவானதாகப் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், 2015-ம் ஆண்டு முதல் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் ரம்யா என்பவர் கணக்காளராகப் பணிபுரிந்து வருவதாகவும், விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் சில ஆண்டுகளாக வருமான வரித்துறைக்குச் செலுத்தச் வேண்டிய டிடிஎஸ் தொகையை அவர் செலுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் டிடிஎஸ் தொகையினை தனது கணக்கிலும், கணவர், உறவினர் கணக்கிலும் பரிமாற்றம் செய்துவிட்டு, நிறுவனத்திடம் டிடிஎஸ் தொகையினைக் கட்டிவிட்டதாகப் போலி ஆவணங்களையும், வங்கி விவரங்களையும் காட்டி மோசடி செய்ததாகப் புகார் மனுவில் ஹரிகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது ரம்யா மீடியாவில் பேட்டி அளித்து வருகிறார்.
அதில், விஷால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். விஷால் தன்னுடைய அலுவலகத்தில் தொடர்ந்து நடத்தும் கட்டப் பஞ்சாயத்துக்கு நான் தான் சாட்சி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படங்களில் பார்ப்பது போல அவர் ஹீரோ இல்லை பெரிய வில்லன் என தெரிவித்துள்ளார் அவர், தன் மீது சுமத்தப்பட்டுள்ள பண கையாடல் புகார் பற்றி பேசிய அவர் தான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
விஷால் நிறுவனத்தில் நடந்து வரும் விஷயங்கள் எனக்குத் தெரியும் என்றும் ஆனாலும் தான் அமைதியாக இருக்க வேண்டியதாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், விஷால் தன்னை மிரட்டிவிட்டு காரை எடுத்து சென்று விட்டதாகவும் ரம்யா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மேனேஜர் ஹரி அடியாட்களை வைத்து தன்னையும் தன் குடும்பத்தையும் தாக்கியதாக தெரிவித்துள்ள ரம்யா, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், விஷாலின் மேனஜர் கார் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடிகர் விஷாலின் மேனேஜர் ஹரியின் கார், அவரது வீட்டுக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை அந்த காரை பார்த்த அவர் அப்படியே ஷாக் ஆகி போயுள்ளார்.
அனைத்து கண்ணாடிகளும், உடைத்து நொறுக்கப்பட்ட நிலையில், கார் முழுவதும் டேமேஜ் ஆகி இருந்ததாம்.
தனது கார், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இரவோடு இரவாக அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில், மேனேஜர் ஹரி, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக ஒரு புகாரையும் கொடுத்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்துக்கு கணக்கர் ரம்யா காரணமாக இருப்பாரா? என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.