திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினரின் 17 வயது மகளான சிறுமியை, புதுக்கோட்டை மாவட்டம், பகவான்பட்டியை சேர்ந்த ராம்கி (22) என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து, இருவரும் பழகி வந்த நிலையில், அந்த சிறுமி கர்ப்பமாகினார். ஆனால் ராம்கி திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், தன்னை திருமணம் செய்ய மறுத்ததாக மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அச்சிறுமி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ராம்கியை போலீசார் தேடி வந்த நிலையில், முன்ஜாமீன் பெற்றுக்கொண்டு மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அவர் சரணடைந்தார்.
மனமுடைந்திருந்த சிறுமி இன்று வயலுக்கு அடிக்கும் விஷமருந்தை குடித்துள்ளார். இதனால் ஆபத்தான நிலையில் அவர் மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ராம்கியிடம் மணப்பாறை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.