தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண், தாய் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தாமரை (23). இவருக்கு 2 மாதத்துக்கு முன்பு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் நேற்று உத்தரமேரூரில் உள்ள தனது அம்மா வீட்டில் செந்தாமரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் மகள் தற்கொலை செய்து கொண்டதை குறித்து பெற்றோர் பொலிசில் எந்த தகவலையும் சொல்லாத நிலையில் யாருக்கும் தெரியாமல் உடலை ரகசியமாக புதைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த விடயத்தை எப்படியோ கண்டுபிடித்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தாமரையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் செந்தாமரை இறந்தது தன்னுடைய அம்மா வீடு என்பதாலும், இறந்த சடலத்தை யாருக்கும் தெரியாமல் புதைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற சந்தேகமும் பொலிசாருக்கு எழுந்தது.
இது தொடர்பான விசாரணையில், திருமணத்துக்கு முன்பு செந்தாமரை வேறு ஒரு நபரை காதலித்து வந்ததாகவும் அந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதன்பிறகே மகளை சமாதானம் செய்து அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.
கல்யாணம் ஆனதில் இருந்தே செந்தாமரை மனமுடைந்து சோகத்துடன் காணப்பட்டு வந்ததோடு அவர் சுதந்திரமாக வெளியில் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த செந்தாமரை தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது, ஆனால் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே இது கொலையா அல்லது தற்கொலையா என்பது உறுதியாகும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.