மது போதை தரும் என்றெண்ணி குளியலுக்குப் பயன்படுத்தும் எண்ணையைக் குடித்த 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சைபீரியாவின் இர்குட்ஸ்க் நகரில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 6 ஆயிரம் பேர் வசிக்கும் சிறிய நகரமான இர்குட்ஸ்க்கில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களே அதிகம்.
மது போதையைத் தரும் என்ற ஆசையில் விலை மலிவாக உள்ள குளியல் எண்ணையைக் குடித்த சுமார் 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சைபீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட பொருட்கள் அந்த குளியல் எண்ணைய் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த பிரதமர் டிமிட்ரி மெத்மதேவ் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து அந்த நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் இருந்து 2,000 லிட்டருக்கும் அதிகமான குளியல் எண்ணைய் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.