உடல் நலம் சரியில்லாமல் இருந்த அத்தைக்கு என்ன சிகிச்சை தரப்பட்டது என்பதை சசிகலா விளக்கம் அளிக்க மறுப்பது ஏன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் கேட்டு வருகின்றனர்.
ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்ள ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் விரும்புகிறார். இதையேதான் அவரது அண்ணன் மகள் தீபாவும் கேட்கிறார்.
அத்தையின் மரணத்தில் எந்த சந்தேகமும் தனக்கு இல்லை. அதே நேரத்தில் அவர் மருத்துவமனையில் சேர்ந்தது முதல் கடைசி நாள் வரை நடந்த விசயங்கள், அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி அவருடன் இருந்தவர் விளக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதைத்தான் மருத்துவர்கள் கூறினார்களே என்று கேள்விக்கு, டாக்டர்கள் சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும், அவருடைய உதவியாளர் என்று சொல்லிக்கொண்டு உடன் இருந்தவர்கள் கூற வேண்டியது அவசியம்.
அதிமுக பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்று நினைக்கும் சசிகலா, இதைக் கூட சொல்லக்கூடாதா? இந்த விசயத்திற்கே பேச மறுப்பவர்கள், நாளை பொதுச்செயலாளர் ஆகி கட்சியை எப்படி வழி நடத்துவார்கள் என்று தீபா கேட்டுள்ளார்.