தமிழக அரசியலில் ‘அம்மா’ என்ற வார்த்தை மெல்ல மெல்ல மறைந்து ‘சின்னம்மா’ என்ற வார்த்தை அதிகளவில் உச்சரிக்கப்பட்டு வரும் காலகட்டம் இது. ‘அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும். தமிழக முதல்வராகவும் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்’ என சசிகலாவிடம் அ.தி.மு.க. நிர்வாகிகள் கெஞ்சி வரும் காட்சிகளால் தமிழக அரசியல் பரபரத்துக்கிடக்கிறது. சசிகலா எப்படி இந்த உயரத்துக்கு வந்தார் என்பது புரியாமல் பலரும் திகைத்து நிற்கிறார்கள்.
‘தாய் தந்த வரம்’ என்றும் ஜெயலலிதா தந்து விட்டு சென்ற வாரிசு என்றும் அடையாளம் காட்டப்பட்டு வருகிறார் சசிகலா. இன்று கட்சியையும், ஆட்சியையும் தலைமை ஏற்று நடத்தும் முடிவுக்கு சசிகலா வந்திருக்கலாம். ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலாவின் நிலையே வேறு. இந்த நாளை சசிகலா ஒரு போதும் மறந்திருக்க முடியாது. ஆம்.. 5 ஆண்டுகளுக்கு முன்னர் போயஸ் கார்டனை விட்டும், கட்சியை விட்டும் சசிகலா வெளியேற்றப்பட்ட தினம் இன்று.
முதலில் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்து, பின்னர் உற்ற தோழி, உடன்பிறவா சகோதரி என ஜெயலலிதாவை மிக நெருங்கிய சசிகலா, போயஸ் கார்டனுக்குள் ஜெயலலிதாவுக்கு அடுத்து எல்லாமுமாக இருந்தார். ஜெயலலிதாவுக்கு அடுத்து என்ற நிலையில் இருந்த வரை சசிகலாவுக்கு எந்த சிக்கலும் இருக்கவில்லை. ஜெயலலிதாவுக்கும் மேலே சென்று கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம் செலுத்த முயன்றபோதுதான் பெரும் சிக்கலை சந்தித்தார் சசிகலா.
”எனக்குத் தெரியாமல்… நான் இல்லாமல்… நீங்கள் எனக்கு இணையாக அரசை நடத்துகிறீர்களா?” என சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு எதிராக சீறிய ஜெயலலிதா, 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில், (2011, டிசம்பர் 19ம் தேதி) துரோகி என்றும், தனக்கு எதிராக சதி செய்வதாகவும் சொல்லி சசிகலாவை கட்சியை விட்டு வெளியேற்றினார். அவரோடு அவரது கணவர் நடராஜன் உட்பட உறவினர்கள் 13 பேரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்கள்.
சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் அதே மாதத்தின் இறுதியில் நடந்த பொதுக்குழுவிலும் சசிகலாவுக்கு எதிராக ஆவேசம் காட்டினார் ஜெயலலிதா. “தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்பு கொண்டு, நாங்கள் மீண்டும் உள்ளே சென்று விடுவோம். மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களைப் பகைத்துக் கொண்டால், நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு, உங்களைப் பழி வாங்கி விடுவோம்.
ஆகவே எங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி தலைமை மீது சந்தேகம் வரும் வகையில் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களின் பேச்சைக் கேட்டு நம்பி செயல்படும் கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்புக் கிடையாது” என சசிகலாவையும், அவரது ஆதரவாளர்களையும் எச்சரித்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவை மீறி சசிகலா இயங்க துவங்கியதுதான் இந்த பிரச்னைகளுக்கும் காரணம் என சொல்லப்பட்டது. ‘ஜெயலலிதாவுக்கு மாற்றாக யாரை முதலமைச்சராகக் கொண்டுவரலாம்?’ என்று இந்தக் குடும்ப உறுப்பினர்கள் சிலர் பேசத்துவங்கியதன் பின்னணியில் தான் இந்த முடிவை ஜெயலலிதா எடுத்ததாக சொல்லப்பட்டது. ‘என்னை வைத்து ஆதாயம் பெறுபவர்கள் எனக்கு எதிராகவே சதி செய்வதா?’ என்று கொந்தளித்துதான் சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றினார்.
ஆனால் இந்த பிரிவு வெகு காலம் நீடிக்கவில்லை. 3 மாதங்களில் மீண்டும் ஜெயலலிதா – சசிகலா நட்பு துளிர்த்தது. “அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் எனக்கு வேண்டாதவர்கள். அக்காவுக்கு எதிரான உறவுகளை நான் துண்டித்து விட்டேன். அரசியலில் ஈடுபடும் எண்ணமோ, பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசையோ துளியும் இல்லை. என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவுக்கு அர்ப்பணித்து விட்டேன். இனியும் எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்கு பணி செய்து உதவியாக இருப்பேன்,” என ஏப்ரல் மாதத்தில் அறிக்கை வெளியிட்டார் சசிகலா.
இதன் பின்னர் போயஸ் தோட்டத்தின் மிகப்பெரிய கதவு சசிகலாவுக்கு மீண்டும் திறந்தது. சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவ டிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் ஜெயலலிதா அறிவித்தார். சசிகலாவை மட்டுமே சேர்த்துக்கொண்டார். அவருடன் நீக்கப்பட்டவர்கள் கட்சியில் மீண்டும் சேர்க்கப்படவில்லை.
‘ஜெயலலிதாவை, அவர் வகிக்கும் பதவியில் இருந்து விலக்குவதற்கும் அந்த இடத்தில் அமர்வதற்கும் திவாகரனும், ராவணனும் சதி செய்தார்கள்’ என சொல்லப்பட்டதை இல்லை என சொல்லி விடவில்லை. ‘சசிகலா அப்பாவி. அவருக்கு தெரியாமல் நடந்து விட்டது’ என்ற ரீதியில்தான் ஜெயலலிதா சொல்லி இருந்தார்.
இப்போது காட்சிகள் மாறிவிட்டன. “அரசியலில் ஈடுபடும் எண்ணமோ, பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசையோ துளியும் இல்லை” என ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியவர், இப்போது அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும், கட்சியின் முதல்வராகவும் பொறுப்பேற்க முடிவு செய்து விட்டார். ஜெயலலிதாவுக்கு மாற்றாக யாரை முதல்வராக கொண்டு வரலாம் என திட்டமிட்டு சதி செய்ய முற்பட்டதாக கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள், இப்போது மீண்டும் நேரடியாக அதிகாரம் செலுத்த துவங்கி இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. எனும் பேரியக்கம், சசிகலாவை தலைமையேற்று நடக்கத் துவங்கியிருக்கிறது. ஏனென்றால், அரசியலில் பழைய கதைகள் பெரும்பாலும் செல்லுபடியாவதில்லை.