பேஸ்புக் உட்பட்ட சமூக ஊடகங்களில் அரச அதிகாரிகள், காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகள் பதிவிடும் கருத்துக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கண்காணிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்
தேர்தல் ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு இதனை கண்காணிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தமது ஆணைக்குழுவின் கண்காணிப்பின் போது மீறல்களில் ஈடுபடுவோர், பொதுநிர்வாக அமைச்சின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு காவல்துறையின் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் தமக்கு தனிப்பட்ட ரீதியாக தயக்கம் உள்ளபோதும் தேசிய நலன்கருதி இது மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் தொடர்ந்தும் தமக்கு அலுவலக வாகனங்களை பயன்படுத்தும் ராஜாங்க அமைச்சர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் காவல்துறையினரிடம் கோரியுள்ளார்.
காவல்துறை தகவல்களின்படி மஹாவலி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க 2 வாகனங்களை பயன்படுத்துகிறார். மீன்பிடித்துறை ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஒரு வாகனத்தை பயன்படுத்துகிறார்.
சுற்றுலா மேம்படுத்தல்துறை ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ இரண்டு வாகனங்களை பயன்படுத்துகிறார்.
மனித உரிமைகள் மற்றும் சட்டத்துறை ராஜாங்க அமைச்சர் மொஹான்ப பிரியதர்ஷன மற்றும் முதலீட்டுத்துறை மேம்படுத்தல் ராஜாங்க அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல ஒரு அலுவலக வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்.
இதேவேளை தேர்தல் பிரசாரங்களுக்காக நான்கு வழிபாட்டுத்தலங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் வேட்பாளர் தேர்தலில் வெற்றிப்பெற்றாலும் தோல்வியடைந்தாலும் தமது குடியியல் உரிமையை இழப்பார் என்று தேசப்பிரியசுட்டிக்காட்டியுள்ளார்.