யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட புதிய நடைமுறைகளின் பிரகாரம் எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள துணைவேந்தர் தெரிவுக்கான மதிப்பீடு செய்யும் விசேட கூட்டத்தில், மதிப்பீடு செய்யும் பேரவை உறுப்பினர்கள் தொடர்பிலேயே இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட புதிய நடைமுறைகளின் பிரகாரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காகப் பதிவாளரால் கடந்த மே மாதம் 15 ஆம் திகதி விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
அதற்கான முடிவுத் திகதியாக அறிவிக்கப்பட்ட ஜூன் மாதம் 9 ஆம் திகதியன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக 6 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அந்த 6 பேரினது தகுதி, தராதரங்களின் அடிப்படையில் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து, திறமை அடிப்படையில் முதல் 5 பேரின் புள்ளி – விபரங்களை, எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதியன்று நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கும் அதே நேரத்தில் – அன்றைய தினமே பேரவை உறுப்பினர்களும் தனித்தனியாக மதிப்பீடு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில்,
பேரவையில் மூதவை சார்பில் அங்கம் வகிக்கும் ஒருவர், பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெறுவதற்காக – உயர் பட்டப் படிப்புகள் பீடத்தின் மாணவராகப் பதிவு செய்து, கற்றுக் கொண்டிருக்கும் அதே வேளை,
குறிப்பிட்ட பீடத்தின் பீடாதிபதியும் ஒரு துணைவேந்தர் விண்ணப்பதாரியாக இருப்பதனால் முரண் நகையைத் (conflict of interest) தோற்றுவிக்கலாம் என்று ஏனைய விண்ணப்பதாரிகளும், பேரவை உறுப்பினர்களும் விசனமடைந்திருக்கின்றனர்.