கொவிட்-19 வைரஸ் பரவல் மீண்டும் தீவரமடையக் கூடியவாறான நிலைமை ஏற்பட்டுள்ள போதிலும் அது தலைதூக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.
கொரோனா அச்சத்திலிருந்து நாட்டு மக்களை மீட்டெடுப்பதும் தேசிய பாதுகாப்பின் ஒரு அங்கமாகும் என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
கடந்த மூன்று வாரங்களுக்குள் சிறைச்சாலைகளுக்குள் 1100 கையடக்க தொலைபேசிகளும் 1000 சிம் அட்டைகளும் சுமார் 400 தொலைபேசி மின்னேற்றிகளும் கைப்பற்றப்பட்டன.
நாட்டினுள் மிக வேகமாக போதைப்பொருள் பாவனை அதிகரிக்குமாயின் போதைப் பொருள் விற்பனையாளர்கள் சிறைச்சாலைக்குள்ளிருந்து கோடிக்கணக்கில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர் என்றால் இவ்வாறான திட்டமிட்ட குற்றச் செயல்களை நாம் இல்லாதொழிக்க வேண்டும்.
எல்லா சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் பயத்துடன் வாழும் சூழல் ஏற்படுவதை நாம் தவிர்க்க வேண்டும். இவ்வாறான சூழலை உருவாக்கும் தினத்திலேயே எம்மால் சந்தோஷமாக சுவாசிக்க முடியும்.
கொவிட்-19 அச்சத்திலிருந்து மக்களை மீட்க வேண்டும். இதுவும் தேசிய பாதுகாப்பின் ஒரு அங்கமாகும்.
கொவிட் பரவல் தீவிரமடைந்ததிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றனர்.
மிகுந்த வெற்றியுடன் நாம் அதனைச் செய்தோம். தற்போது மீண்டும் வைரஸ் தீவிரமடைவதைப் போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் நாம் உறுதியளிக்கின்றோம். மீண்டும் கொரோனா தலைதூக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றார்.