குடும்பப் பெண்கள் வெள்ளை பட்டுப் புடவை அணிவது நிச்சயமாக இல்லை.
வெள்ளை நிற ஆடை என்பது தூய்மையின் அடையாளம். வெண்ணிற ஆடை என்பது விதவைப் பெண்களுக்கு உரியது, இதனை சுமங்கலிப் பெண்கள் அணியக்கூடாது என்று சொல்வது முற்றிலும் தவறான கருத்து.
பொதுவாக சுமங்கலிப் பெண்கள் எந்த நிறமாக இருந்தாலும் அதில் அலங்காரம் ஏதுமின்றி ஒரே வண்ணத்தில் அணிவதை விட பல நிறங்கள் கலந்தும், அலங்கார வேலைப்பாடுகளுடனும் கூடிய ஆடைகளை அணிவது என்பது நல்லது என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
அதாவது பார்ப்பதற்கு பளபளவென்று இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு அலங்காரத்துடன் பெண்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் மகாலக்ஷ்மியின் அருள் அந்த குடும்பத்திற்கு என்றென்றும் நீடித்திருக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
அதே நேரத்தில் அந்த அலங்காரம் ஆனது சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
நெற்றியில் திலகம், கண்களில் மை, தலைவாரி பூச்சூடுதல், கை நிறைய வளையல்கள், கால்களில் தண்டை அல்லது கொலுசு, பலவண்ணங்களுடன் கூடிய புடவை, கழுத்தினில் ஆபரணம், பொன் நகையைவிட உயர்ந்த நகையான புன்னகை என்று எப்பொழுதும் கலகலவென்று பெண்கள் இருக்க வேண்டும் என்பதை சாஸ்திரம் வலியுறுத்திச் சொல்கிறது.
வெண்ணிற ஆடை என்பது அமங்கலமான விஷயம் என்று சாஸ்திரம் எந்தவொரு இடத்திலும் சொல்லவில்லை. வெண்ணிற பட்டுப்புடவை அலங்கார ஜரிகையுடன் இருப்பது இன்னமும் சிறப்பான ஒன்று.