இந்தோனேஷியாவில் துவிச்சக்கரவண்டியொன்றை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட அவுஸ்திரேலிய ஜோடியொன்று, தமது குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாசகம் அடங்கிய பதாகையுடன் வீதியில் வலம்வந்தனர்.
இந்தோனேஷியாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு அருகிலுள்ளகிலி ட்ரவான்கான் எனும் தீவில் துவிச்சக்கர வண்டியொன்றைத் திருடியதாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் குற்றம் சுமத்தப்பட்டனர்.
இவர்கள் சைக்கிளொன்றை திருடுவது கண்காணிப்பு கெமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதையடுத்து, இவர்கள் மேற்படி பதாகையை கழுத்தில் மாட்டியவாறு வீதிகளில் வலம் வந்தனர்.
“நான் திருடன். நான் செய்ததை நீங்கள் செய்யாதீர்கள்” என அதில் எழுதப்பட்டிருந்தது. ட்ரவான்கான் தீவில் சுழியோடல் நிலையமொன்றை நடத்தும் , ஒருவர் இது தொடர்பாக, குற்றம் புரிந்தோருக்கு உள்ளூர் காவல் துறையினரால் இத்தகைய தண்டனை அளிக்கப்படுவது வழக்கம் எனக் கூறியுள்ளார்.
“இது ஒரு சிறிய தீவு, பொலிஸாரின் பிரசன்னம் குறைவு, உள்ளூர் மக்கள் இணைந்து உள்ளூர் பாதுகாப்புப் படையொன்றை ஸ்தாபித்துள்ளனர். இந்தோனேஷிய பெரு நிலப்பரப்பிரிலுள்ள அரச அதிகாரிகளால் இப்படை நிர்வகிக்கப்படுகிறது” எனவும் அவர் தெரிவத்துள்ளார்.
சுமார் ஒரு வருடமாக அங்கு தங்கியுள்ள மைக் என்பவர் இது தொடர்பாக கூறுகையில், திருட்டுக் குற்றங்களுக்கு இத்தகைய தண்டனை அளிக்கப்படுகிறது. 7, 8 தடவைகள் இது போன்று நடந்ததை நான் கண்டுள்ளேன்.
உல்லாசப் பயணிகள் மாத்திரமல்லாமல் உள்ளூர்வாசிகளுக்கும் இத் தண்டனை அளிக்கப்படுகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.