போதைப்பொருள் மனிதர்களை எப்படி அழிக்கிறது என்பதை புரிந்து கொள்ள, போதைப்பொருள் கடத்தல் ஜோடியொன்றின் புகைப்படத்தை இங்கிலாந்து பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
கொகெயின் கடத்தியபோது இந்த ஜோடி சிக்கியது. ரைஸ் வாட்கின்ஸ் (33), மற்றும் ரேச்சல் ஹேவுட் (39) ஆகியோரின் புகைப்படங்கள் வெளிவந்தன.
மே 31 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த ஜோடி சவுத் வேல்ஸின் பாரி, போர்ட் ரோட்டில் போதைப்பொருளுடன் சிக்கினர். இருவரும் கைது செய்யப்பட்டு ஹெராயின் மற்றும் கிராக் கோகோயின் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
கார்டிஃப் கிரவுன் நீதிமன்றத்தில் அவர்கள் செய்த குற்றங்களை இந்த ஜோடி ஒப்புக்கொண்டது.
வாட்கின்ஸுக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் எட்டு மாத சிறைத்தண்டனையும், ஹேவுட்க்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளாக ஹெரோயின் மற்றும் கிராக் கோகோயின் சப்ளை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்த ஜோடி, சக்திவாய்ந்த போதைப்பொருளால் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை படங்கள் காட்டுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் சமூக ஊடக படங்களிற்கும் தற்போதைய தோற்றங்களிற்கிடையிலும் உள்ள வித்தியாசம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தோல் வெளிறி, சுருங்கி, வயோதிக தோற்றத்திற்கு இரண்டு வருடங்களிற்குள் மாறியுள்ளனர்.
இது தொடர்பாக ஒரு காவல்துறை அதிகாரி கூறும்போது, ‘போதைப்பொருள் பயன்படுத்த நினைப்பவர்கள், பாவிப்பவர்களிற்கு ஒரு பாடம் இருந்தால்- அது இந்த புகைப்படம்தான். மனிதர்களை போதைப்பொருள் எவ்வாறு அழிக்கிறது என்பதற்கு இந்த படங்கள் சான்று’என தெரிவித்தார்.