ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடி மாதத்திற்கு அத்தனையொரு கீர்த்தி.
அதற்கு என்ன காரணம்? இவ்வளவு ஸ்ரேஷ்டமான மாதத்தில், திருமணங்கள் செய்யப்படுவதில்லை. ஏன்? இதற்கெல்லாம் காரணம் இல்லாமல் இல்லை.
அவற்றை தெளிவாக விளக்குகிறார், அகில லோக ஸ்ரீ தச மஹா வித்யா டிரஸ்டின் பீடாதிபதி, ஸ்ரீ சோமசுந்தர சிவாச்சாரியார் அவர்கள்.
‘ஒரு வருடத்தின் மாதங்கள் இரு அயனங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயணப் புண்ணிய காலம் எனவும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் எனவும் வழங்கப்படுகிறது.
ஆடி மாதம் கற்கடக மாதம் என்று கூறப்படுகிறது. இந்த மாதத்தில் ஸ்ரீ சூரிய பகவானின் தேரானது வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி பயணிக்கத் தொடங்குகிறது. இந்தக் காலத்தில், பகல் பொழுது குறைவாகவும், இரவுப் பொழுது நீண்டும் இருக்கும்.
ஆடி மாதத்தில், ஸ்ரீ சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசி என்பது, ஸ்ரீ சந்திர பகவானின் ஆட்சி வீடாகும்.
சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி கிரகத்தில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் சந்திரனின் ஆளுமை கூடுகிறது.
சிவனை விட சக்திக்கே வல்லமை அதிகமாக பரிமளிக்கிறது. ஆஷாட மாதம் என்று கூறப்படும் இந்த ஆடி மாதம் சக்தி மாதமாக வழிபடப்பட வேண்டும் என்று ஈஸ்வரன், ஈஸ்வரிக்கு அனுக்கிரகம் செய்தார்.
அதன் காரணமாகத் தான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த வேப்பிலை, எலுமிச்சம் பழம், கூழ் ஆகியவை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. இந்த மாதத்தில் பிராண வாயுவின் சக்தி வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்குமாம்.
இவைகளை உபயோகப்படுத்துவதில், ஒரு முக்கியமான விஞ்ஞான ரீதியான காரணமும் உண்டு. இந்த நாட்களில் உஷ்ணம் கூடி இருக்கும்.
அம்மனுக்கு படைத்த ஆடிக்கூழை சாப்பிடும் பொழுது, கூழானது, உஷ்ணத்தைக் குறைத்து, உடலை சீரான வெப்ப நிலையில் வைக்கும். எலுமிச்சம் பழத்திற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் சக்தி உண்டு.
வேப்பிலையைப்பற்றி கூறவே வேண்டாம். தீய சக்திகளையும், உடலுக்குக் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கும் சக்தி அந்த மருத்துவ குணம் கொண்ட இலைகளுக்கு உண்டு.
பெண்கள், ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி ஆடி ஞாயிறு ஆகிய நாட்களில் விரதம் இருந்தும், வேப்பிலை ஆடை தரித்தும், அலகு குத்தியும், பூ மிதி (தீ மிதி) விழா எடுத்தும் தங்களின் கோரிக்கையை அம்மனிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார்கள்.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அலகு குத்தலின் வலியோ, பூ மிதியின் பொழுது நெருப்பின் உஷ்ணமோ தெரியாமல் ஆதி பராசக்தி காத்தருள்கிறாள்.
இந்த வருட ஆடியில் என்னென்ன விசேஷங்கள் வருகின்றன?
ஆடி முதல் நாள் ஆடிப்பண்டிகையைத் தொடர்ந்து, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாக பஞ்சமி, ஆடிப்பெருக்கு, வரலக்ஷ்மி விரதம், ஆடித்தபசு, ஹயக்ரீவர் ஜெயந்தி, மகா சங்கட ஹர சதுர்த்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஆடிக்கிருத்திகை ஆக இத்தனை வைபவங்கள் வருகின்றன.
ஆகையால் தெய்வங்களுக்கு உண்டான நாட்களாக விளங்குகின்றன.
சரி, ஆடி மாதத்தில் ஏன் திருமணங்கள் செய்வதில்லை?
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாளாகும். ஆடி மாதம் பிறந்தாலே தேவர்களுக்கு சந்தியான வேளை ஆரம்பித்து விடுகிறது.
அந்த மாதத்தில் திருமணம் போன்ற வைபவங்களை வைத்துக் கொண்டால், தெய்வங்களை தொந்திரவு செய்வதோடு அல்லாமல், அவர்களின் ஆசிர்வாதம், அனுக்கிரகம் இரண்டுமே பரிபூர்ணமாகக் கிடைக்காது. இந்தக் காரணங்களால் தான் நாம் ஆடியை தள்ளுபடி செய்கிறோம்.
தள்ளுபடி என்றவுடன் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது.
ஆடித் தள்ளுபடி எப்படி வந்தது?
ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. ஆடியில் விதை விதைத்தால், மழை நாட்களில் பயிர் தழைத்து, தை மாத அறுவடையில் நல்ல மகசூல் கொடுக்கும். விவசாயி ஆனவன் நிலத்தை உழுது, விதை போட்டதில் கையிருப்பு தொகையை செலவழித்திருப்பான்.
அவனால் நிறைய தொகை கொடுத்து எந்த சாமானும் வாங்க முடியாது. ஆகையால் அவர்களுக்காக தள்ளுபடி விலையில் கொடுக்க ஆரம்பித்தார்கள். அது இன்று வரை தொடர்கிறது.
எது எப்படியோ, ஆடி மாதத்தில் ஞாயிறு பகவானின் சூட்சும சக்திக் கதிர்கள் பூமியில் விழுவதால், ஜப தபங்கள், மந்திரங்கள், பூஜைகள் எது செய்தாலும் பன்மடங்கு பயனைத் தரும் என்று கூறப்படுகிறது.
ஆகையால் பக்த கோடிகள் அனைவரும் இந்த புனிதமான மாதத்தில் தெய்வ காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தெய்வானுகூலம் பெற வேண்டும்’
ஆடியின் மகத்துவத்தை அறிந்து கொண்டோம் அல்லவா? இந்த நாட்களில் நம் மனதை தெய்வ சிந்தனைகளில் செலுத்தி, மன சுத்தியுடன் பூஜை முறைகளை க்ரமங்களுடன் செய்து, தெய்வ கடாட்சத்தினைப் பெறுவோம்.