சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து திரையரங்குகள் அடுத்த வாரம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சீனாவின் திரையரங்க நிர்வாகத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சீனாவில் கொரோனா பரவல் தொற்று மீண்டும் பூஜ்ஜியமாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் சீனாவில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 30சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே விநியோகிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும் திரையரங்குகளுக்கு வருபவர்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஜனவரி மாதம் திரையரங்குகள் மூடப்பட்ன. கொரோனா பரவல் குறைந்த நிலையில் மார்ச் மாதம் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் தோன்றியதால் திரையரங்குகள் மூடப்பட்டன.
பெய்ஜிங்கில் கடந்த 10 நாட்களாக எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.
இந்நிலையில், சீனத் தலைநகர் பீஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீஜிங் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பீஜிங்கில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.