மன்னர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, குலோத்துங்க வள நாட்டிற்குள் அமைந்திருந்த ஊர் காரப்பாக்கம். இங்கு கங்கையம்மன் ஆலயம் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த அம்மனின் தோற்றம் சுயம்புவான சிறு கல்லாகும். குளக்கரை ஓரம் மரத்தடியில் தோன்றிய இந்த அம்மன், ஆரம்ப காலத்தில் குளக்கரையில் சிறு குடில் அமைக்கப்பட்டு, அதனுள் வாழ்ந்து அருள் வழங்கி வந்தாள்.
இந்தப் பகுதி வாழ் மக்கள் தங்கள் விவசாயத்தின் தொடக்கமான விதை விதைப்பிற்கும், அதன் அறுவடைக்கும் அன்னையின் உத்தரவு பெற்றே, தங்கள் தொழிலைச் செய்துவந்தனர். அன்னை தந்த அமோக விளைச்சலின் காரணமாக, அவளுக்கு நன்றிக்கடனாக ஆடி மாதத்தில் கூழ் ஊற்றி, கும்பம் வைத்து, ஊரணிப் பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.
மகாபலிபுரத்திலிருந்து சென்னைக்கு மாட்டு வண்டி மூலம் செல்லும் யாத்திரிகர்கள் இத்தலத்து அன்னையை வழிபட்டு, இளைப்பாறிய பின்பு பயணத்தைத் தொடருவார்கள்.
இந்தச் சூழ்நிலையில் அம்மனின் அருள் வெள்ளம் பரவத் தொடங்க, இவ்வூரின் ஐயப்ப குருசாமியும், மண்டல குழுத் தலைவருமான லியோ சுந்தரம் என்ற அடியாரின் பெருமுயற்சியாலும், பொருளுதவியாலும் இன்று ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் பிரமாண்ட ஆலயம் எழும்பி நிற்கிறது. அம்மன் ஆலயத்தின் பின்புறம் கற்பகாம்பாள் உடனுறை கற்பகேஸ்வரர் திருக்கோவிலும் அமைந்துள்ளது, இதன் கூடுதல் சிறப்பாகும்.
ஆலய அமைப்பு :
கங்கை அம்மனுக்கு வடக்கு முகமாக ஐந்து நிலை ராஜகோபுரம் எழிலாக அமைந்திருக்க, எதிரே சதுர வடிவத் திருக்குளம் நீர் நிறைந்து அழகு சேர்க்கின்றது.
ராஜகோபுரத்திற்குள் நுழைந்ததுமே பெரிய துவாரபாலகிகள் இருவர், வண்ணக் கோலத்தில் காவல் நிற்கின்றனர். உள்ளே சுமார் ஆறடி உயர கங்கை அம்மன் அமர்ந்த நிலையில் கருவறைக்குள் காட்சி தருகின்றாள். இவள், திருவடி சூலம் மலைக்கல்லில் உருவானவள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் கீழே பழைய கங்கை அம்மன் எழிலோடு காட்சியருள, அதன் கீழே சுயம்புவான கங்கை அம்மன் சிறு கல் வடிவில் காட்சியளிக்கின்றாள். இவளே பல நூற்றாண்டுகளைக் கண்டவள்.
ஆலயத்தில் இடமிருந்து வலமாக முதலில் துர்க்கை, வலம்புரி விநாயகர், நெய் அபிஷேகப் பிரியன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், அதையொட்டி மேற்கு முக சன்னிதியில் 11 அடி உயரமுள்ள பக்த ஆஞ்சநேயர் சன்னிதிகளும், கபிலமுனி, பகீரதன் சுதைச் சிற்பங்களும் அமைந்துள்ளன. இதனை அடுத்து நவக்கிரகங்கள், தனி சனீஸ்வரர், கால பைரவர், வீர ஆஞ்சநேயர் சன்னிதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன.
கற்பகேஸ்வரர் கோவில் :
கங்கையைத் தன் தலைமுடியில் வைத்து தாங்கிய சிவபெருமானுக்கு, தன் ஆலயத்திற்குத் தனி ஆலயம் எழுப்பிட இடமளித்துள்ளாள் கங்கை. இவ்வாலயம் கங்கையம்மன் சன்னிதியின் பின்புறம் அமைந்துள்ளது. கொடிமரம், பலிபீடம், நந்திதேவரைக் கடந்து முன்மண்டபம் சென்றதும், இறைவனின் கருவறை வரவேற்கின்றது.
கருவறைக்குள் அடியார்களைக் கவர்ந்து இழுக்கும் கற்பகேஸ்வரர் வட்ட வடிவ ஆவுடையாரைக் கொண்டு அழகிய திருமேனியில் ஜொலிக்கின்றார். வேண்டிய வரம் அருளும் இறைவன் இவர். இவரின் இடதுபுறம் எதிரில் எளிய வடிவில் அன்னை கற்பகாம்பாள் அருளாசி வழங்குகிறாள். கொடிமரத்தின் அருகே தென்புறத்தில் நாகலிங்க மரத்தடியில் ஆதி கற்பகேஸ்வரர், நாகராஜன், நாகராணி சிலா வடிவங்கள் அமைந்துள்ளன.
இத்திருக்கோவிலில் மாதந்தோறும் 4-ம் வார ஞாயிற்றுக்கிழமைகளில், காலை முதல் மாலை வரை அடியார்களால் திருவாசக முற்றோதல் மற்றும் தேவாரப் பாடல்கள் ஓதப்படுகிறது.
கங்கையம்மன் ஆலயம் முழுமையும், அழகிய சுதை தூண்கள், கலைநயம் மிக்க சுதைச் சிற்பங்கள் என அனைத்துமே கலைநயத்தினைப் பறைசாற்றுகின்றன.
அம்மன் ஆலயங்கள் நிறைந்த ஊர் :
இவ்வூரில் பழமையான வேண்டவராசி அம்மன், காளியம்மன், திரவுபதியம்மன், பெரியபாளையத்தம்மன், அங்காளம்மன், நாகாத்தம்மன் என அம்மன் ஆலயங்கள் நிறைந்துள்ளன. இது தவிர பெருமாளுக்கான பஜனைக்கோவிலும் உள்ளது.
கங்கை அம்மனுக்கு ஆடித் திருவிழா ஆடி மாத நான்காம் வார செவ்வாய் அன்று தொடங்கி, ஐந்தாம் வார ஞாயிறு வரை அம்மனுக்கு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். விழாவில் கும்பம் வைத்தல், கூழ்வார்த்தல், ஊரணிப் பொங்கல் வைத்தல் என இப்பகுதியே களைகட்டும்.
கற்பகேஸ்வரருக்கு பிரதோஷம், அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம், திருக்குளத்தில் தெப்பல் திருவிழா என அனைத்தும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.
அமைவிடம் :
சென்னை- பழைய மகாபலிபுரம் சாலையில், சென்னையில் இருந்து தெற்கே 23 கி.மீ. தொலைவில், சோழிங்கநல்லூருக்கு முன்பாக காரப்பாக்கம் அமைந்துள்ளது. காரப்பாக்கம் பேருந்து நிறுத்தம் ஆலயத்தை ஒட்டியே உள்ளது. இவ்வழியே ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன.