கொரோனா அச்சுறுத்தலினால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள சூழலில் பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் பாய்ந்தோடும் சீன் நதியில் மிதக்கும் தியேட்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப முயன்று வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக சமூக இடைவெளியை கடைப்பித்து பாரிஸின் எம்.கே 2 சினிமா நிறுவனம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு இந்த மிதக்கும் தியேட்டரை அமைத்துள்ளது. இதனை பார்க்க மக்கள் படையெடுத்து வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மிதவை தியேட்டரில் சுமார் 38 படகுகள் பார்வையாளர்களுக்கான இருக்கைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு படகிலும் நான்கு முதல் ஆறு பேர் வரை அமர்ந்து திரைப்படங்களை பார்க்கலாம். படகில் அமர்ந்திருப்பவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அது தவிர நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நாற்காலியிலிருந்தும் படங்களை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை முதல் படங்கள் இந்த தியேட்டரில் காட்சிப்படுத்தப்பட உள்ளதுடன், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த தியேட்டரை ரசிகர்கள் விரும்பினால் நிரந்தரமாக அமைக்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.