பொலன்நறுவை – பலஹகல பிரதேசத்தில் உள்ள ஆற்றில் நிர்வாணமாக குளித்து, அங்குள்ள கிராமவாசிகளிடம் மோதலை ஏற்படுத்திக்கொண்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவில் கடமையாற்றிய அனைத்து அதிகாரிகளையும் பணியில் இருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டி.ஏ. தர்மசிறி தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பின்னரே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து தெரிய வருகையில்,
தேர்தல் முறைப்பாட்டு பிரிவை சேர்ந்த 7 அதிகாரிகள் கலஹகல பிரதேசத்தில் உள்ள ஆற்றுக்கு சென்றுள்ளதாகவும் சம்பவம் நடக்கும் போது அவர்கள் மதுபானம் அருந்தி இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் நிர்வாணமாக ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது கிராமவாசிகள் சிலர் வந்து அவர்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டதால் இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னர் கிராமவாசிகள் அதிகாரிகளை தாக்கி அவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த 07 அதிகாரிகளில் ஒருவர் கிராமவாசிகளுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து பொலன்நறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலன்நறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.