சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்க அதிகாரிகள் புத்தியை இழந்து விட்டதாக சீனா கடுமையாக சாடியுள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் அமெரிக்கா சீனா இடையேயான உறவில் இதுவரை இல்லாத வகையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சீனாவை விமர்சித்த அமெரிக்க சட்டமா அதிபர் வில்லியம் பார், இராணுவம், தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் பிற துறைகளில் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக சீனா ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கையை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப சக்தியான அமெரிக்காவை எதிர்கொள்ளவோ அல்லது மாற்றவோ சீனா முயலவில்லை எனவும் சீனாவின் முக்கிய அக்கறை அதன் குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும், உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதுமே ஆகும்.
ஒரு சுதந்திர இறையாண்மை கொண்ட அரசாக, சீனா தனது சொந்த இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களைப் பாதுகாக்கவும், சீன மக்கள் கடின உழைப்பால் செய்த சாதனைகளைப் பாதுகாக்கவும், சீனாவுக்கு எதிரான அநீதி மற்றும் தீங்கிழைக்கும் நாடுகளுக்கு எதிராக போராடவும் தங்களுக்கு உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளார்.