இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வடக்கு கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை இம்மாதம் 15ஆம் திகதி முதல், இலங்கை கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அத்தோடு, சந்தேகத்திற்கிடமான கப்பல்களை சோதனை செய்து வருவதாகவும் , வடக்கு கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வசிக்கும் தமிழ் அகதிகள் சிலரும் இந்திய கடத்தல்காரர்களும் இலங்கைக்கு தப்பி வருவது அதிகரித்துள்ளதன் காரணமாக இந்நடவடிக்கையை கடற்படை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சிலருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அண்மையில் கைது செய்திருந்தனர்.
அதோடு, அவர் கொவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு தப்பி வருவதற்கு பாரிய குழுவினர் தயாராகவுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை இலங்கைக்கு வருவதற்கு இருந்த குழுவினரை படகு மூலம் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தும் நடவடிக்கையில் இந்திய மீனவர்கள் சிலர் ஈடுபடுவதாகவும், இதற்காக அவர்கள் 3,000 முதல் 4,000 இந்திய ரூபாய்களை அறவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து , சட்டவிரோத வருகைகளை தடுக்கும் வகையில், வடக்கு கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.