மெக்சிகோ நாட்டில் வெடிப்பொருட்களுக்கான சந்தையில் ஏற்பட்ட பாரிய விபத்தினால் இதுவரை 12 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகவும் 70 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
மெக்சிகோவின் மிகவும் பிரபலமான வெடிப்பொருட்கள் சந்தையில் குறித்த பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் திறந்தவெளி சந்தையான San Pablito Market முழுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறுத்த சந்தையில் சுமார் 300 அரங்குகள் வரை அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து புகை மூட்டம் எழுவதை கண்ட பலரும் அதிர்ச்சியில் குறித்த பகுதி நோக்கி விரைந்துள்ளனர்.
முதல் விபத்தை அடுத்து அதே பகுதியில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் படுகாயமடைந்தவர்களில் சிலருக்கு 90 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் உயிர் பிழைப்பது கடினமென தெரிய வந்துள்ளது. இதனால் உயிர்ச்சேதம் மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு பிரிவினர் கடுமையாக போராடி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் குறித்த சந்தையில் இந்த விபத்து ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டும் இதேபோன்று குறித்த சந்தையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான அரங்குகள் தீக்கிரையானதுடன் லட்சக்கணக்கான தொகைக்கு இழப்பும் ஏற்பட்டிருந்தது.