மூன்று தினங்களாக உணவு எதுவும் இன்றி சுவரின் இடுக்குக்குள் சிக்கி தவித்த சிறுவன் ஒருவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நைஜிரியாவில் ஒன்டோ பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒடுடூவா பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 12 வயதான சிறுவன் ஒருவனே சுவரின் இடுக்குக்குள் சிக்கி இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது வீட்டு சுவரில் ஏறி விளையாக்கொண்டிருந்த குறித்த சிறுவன் சிறிய இடைவெளியுடைய சுவரின் இடுக்குக்குள் தவறி வீழ்ந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் தன்னை காப்பாற்றுமாறு சத்தமிட்டுள்ளான்.
எனினும், ஏதே அமானுஷ்யமான சத்தம் ஒன்றே கேட்பதாக தெரிவித்து அந்த பகுதி மக்கள் அதனை கவனத்தில்கொள்ளவில்லை. தொடர்ந்து மூன்று நாட்களாக சிறுவன் அபாய குரலில் சத்தமிட்டுள்ளான்.
இதனையடுத்து சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் ஆராய்ந்து பார்த்த போது சுவரின் இடுக்குக்குள் சிறுவன் இருப்பதனை அவதானித்துள்ளனர்.
உடனடியாக சுவரை இடித்து சிறுவனை காப்பாற்றியுள்ள அப்பகுதி மக்கள், சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டமை தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.