அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள நடேஸ்- பிரியா தம்பதிகளான இலங்கைத் தமிழ்க் குடும்பம் தமது நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் பீட்டர் டெட்டன், குற்றம் சுமத்தியுள்ளார்.
சிட்னி வானொலி நிகழ்ச்சியொன்றில் இன்றையதினம் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த இலங்கை குடும்பம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவதை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
2012 முதல் தொடரும் இவ் வழக்கு காரணமாக, அவுஸ்திரேலியாவின் செலவு அநேகமாக 10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம்” என்றும் ‘இப் பணம் அவுஸ்திரேலிய குடிமக்களின் வரிப்பணம் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ‘அவர்கள் அகதிகள் அல்ல, அவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெறுவதற்காக சட்டத்திலுள்ள அனைத்து வழிகளையும் தந்திரத்தையும் பயன்படுத்தியுள்ளனர்.
“இது அவர்கள் உருவாக்கிக் கொண்ட நிலைமை, இது நகைப்புக்குரியது, இது அவர்களின் குழந்தைகளுக்கு நியாயமற்றது, மேலும் இது மற்றவர்களுக்கு மிகவும் மோசமான செய்தியை அனுப்புகிறது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கைத் தமிழ்க் குடும்பம் தொடர்பான வழக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கு முடியும் வரை அவர்களை கிறிஸ்மஸ் தீவில் தங்கவைக்க அவுஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.