மஞ்சள் மேகம் – ஒரு
மஞ்சள் மேகம் – சிறு
பெண்ணாகி முன்னே போகும்
பதறும் உடலும் – என்
கதறும் உயிரும் – அவள்
பேர்கேட்டுப் பின்னே போகும்
செல்லப் பூவே – நான்
உன்னைக் கண்டேன்
சில்லுச் சில்லாய் – உயிர்
சிதறக் கண்டேன்
நிலலாயோ நில்லாயோ
உன்பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என்பேர் என்ன
கனவா கனவா – நான்
காண்பது கனவா – என்
கண்முன்னே கடவுள் துகளா
காற்றின் உடலா – கம்பன்
கவிதை மடலா – இவள்
தென்னாட்டின் நான்காம் கடலா
சிலிக்கான் சிலையோ
சிறுவாய் மலரோ
வெள்ளை நதியோ
வெளியூர் நிலவோ
நில்லாயோ நில்லாயோ
உன்பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என்பேர் என்ன
செம்பொன் சிலையோ – இவள்
ஐம்பொன் அழகோ
பிரம்மன் மகளோ – இவள்
பெண்பால் வெயிலோ
நான் உன்னைப் போன்ற
பெண்ணைக் கண்டதில்லை
என் உயிரில் பாதி
யாரும் கொன்றதில்லை
முன்னழகால் முட்டி
மோட்சம் கொடு – இல்லை
பின் முடியால்
என்னைத் தூக்கிலிடு