இதயம் என்பது எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு தசையாலான உறுப்பாகும். இதன் எடை அரை கிலோ கிராமுக்கு குறைவாக இருக்கும். அதாவது நமது கையின் ஒரு பிடி அளவு போன்று தான் காணப்படும். கருவில் உருவாகும் முதல் உறுப்பே இதயம் தான். மார்பின் இடதுப்பகுதியில் மார்பு எலும்புகளுக்கு பின்னால் இதயம் காணப்படும். இதயமானது சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 60 முறை துடிக்கிறது.
இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் குழாய்கள் தமனிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது பெரிகார்டியல் என்ற நீர்மத்தால் சூழப்பட்டுள்ளது. இந் நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும்போது மற்ற பாகங்களுடன் உராய்வதை தடுக்கவும் உதவுகிறது.
வலது பக்க இதயத்தின் பணியானது அசுத்த ரத்தத்தை சேகரிப்பது ஆகும். அசுத்த ரத்தமானது வலது ஆரிக்கிளை அடைகிறது. பின்னர் இது வலது வெண்ட்டிரிக்கிள் வழியாக ரத்தத்தை நுரையீரல்களுக்கு அனுப்புகிறது. இங்கு கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றப்பட்டு ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது.
இதயத்தின் இடது பக்கம் தூய ரத்தத்தை பெறுகிறது. இது இடது ஆரிக்கிளை அடைகிறது. இங்கிருந்து ரத்தமானது இடது வெண்ட்டிரிக்கிளை அடைந்து அங்கிருந்து உடல் முழுவதும் அனுப்பப்படுகிறது. இதயத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள வெண்ட்டிரிக்கிள்கள் மேலே உள்ள ஆரிக்கிள்களை விட தடிப்பாக இருக்கின்றன. அதிலும் இடது வெண்ட்டிரிக்கிளானது ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த அதிக வேகம் தேவைப்படுவதால் வலது வெண்ட்டிரிக்கிளை விட தடிப்பாக உள்ளது.
இதயத்தின் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் தடைப்படும்போது இதயத்திசு இறப்பு அல்லது இதயத்தசை இறப்பு ஏற்படுகிறது. மேலும் இதய அடைப்பிதழ் குறைபாடுகளால் இதய அடைப்பிதழ் நோயும் ஏற்படுகிறது. இந்த நோயின் தீவிரத்தை பொறுத்து மருந்துகள் மூலமாகவே அல்லது அறுவை சிகிச்சை அல்லது அடைப்பிதழ் மாற்று அறுவை சிகிச்சை மூலமாகவே சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் இதயநோயானது பிறவிக்கோளாறுகள், இதய வால்வுகளில் ஏற்படும் நோய்கள், இதய தசைகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும் இதயத்தின் கீழ் அறையில் இடது புறத்தில் இருந்து புறப்படும் பிரதான நாளங்கள் மற்றும் அதன் கிளை நாளங்களில் உள்ள நோய்கள் மூலமாகவும் ஏற்படலாம். இதயத்துக்கு ரத்தம் வழங்கும் நாளங்களில் ஏற்படும் நோய்களாலும் இதய நோய்கள் ஏற்படுகிறது.
இதுதவிர ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதனால் இதய தசைகள் ரத்தம் கிடைக்கப்பெறாமல் இருப்பதால் மாரடைப்பும் ஏற்படுகிறது. இது பெண்களை விட ஆண்களை தான் அதிகம் தாக்குகின்றன. ஏனென்றால் பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவை பெண்களை மாரடைப்பில் இருந்து பாதுகாக்கின்றன.
இந்த தாக்கம் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் வரை இருக்கும். மாரடைப்பு வருவதற்கு புகைப்பிடித்தல், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு குறைவாக இருத்தல், அதிக கொலஸ்ட்ரால், உடல் உழைப்பு இல்லாமை, குடும்பத்தில் பலருக்கு தொன்று தொட்டு மாரடைப்பு, மன அழுத்தம், அதீத கோபம் மற்றும் படபடப்பு, மரபியல் காரணிகள் காரணமாக அமைகின்றன.
இவற்றை தவிர்க்க புகைப்பிடித்தலை முழுவதுமாக நிறுத்த வேண்டும். உடற்பயிற்சியும் அவசியம். உப்பு, கொழுப்பு பொருட்கள் குறைந்த மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துகள் உள்ள உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும். இவற்றை கடைபிடிப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.