கொரோனா தொற்று தொடர்பான அச்சங்களை மனநோய் என தெரிவித்துள்ள பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ வோட்காவை குடித்து கொரோனாவை விரட்டுங்கள் என அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஐரோப்பாவில் கொரோனாவல் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பெலாரஸ் இருந்து வருகிறது. இந்த நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வருகிறார். அமெரிக்காவால் ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என அழைக்கப்படும் இவர், உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய தொற்றான கொரோனா வைரஸை தொடக்கம் முதலே அலட்சியப்படுத்தி வருகிறார். கொரோனா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், வீட்டு மருத்துவத்தையே பின்பற்றுமாறும் கூறினார். மேலும், பெலாரசில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த மறுத்த அதிபர் லுகாசென்கோ, ஐரோப்பாவில் கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்திலும் நாட்டில் எல்லைகளை திறந்து வைத்திருந்தார். மேலும் கால்பந்து லீக் போட்டிகளை பார்வையாளர்களுடன் காண அனுமதியளித்ததோடு அரசு அலுவல்கள், சந்திப்புகளை அவர் நடத்திக்கொண்டிருந்தார்.
இதனிடையே மிகவும் அலட்சியப் போக்குடன் இருந்த அதிபருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் சிகிச்சைப் பெற்று குணமடைந்த அவர், மக்களிடையே உரையாடினார். அப்போது பேசிய அவர், “நான் கொரோனா தொற்றிலிருந்து எவ்வித மருந்தும் எடுத்துக்கொள்ளாமலேயே மீண்டுவந்துள்ளேன். மருத்துவர்கள் இது அறிகுறியற்ற நோய் என்று கூறியுள்ளனர். இந்நோய் ஒரு மனநோய் தான், அதனால் வோட்கா குடித்தபடி கொரோனாவை விரட்டுங்கள்” என தெரிவித்துள்ளார்.
சுமார் 95 லட்சம் மக்கள் தொகையை கொண்ட அந்நாட்டில் இதுவரை 67,670 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 553 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 61,442 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.