இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் காற்று மாசு குறித்து கவலை கொள்ளாமல் செயல்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் இது தொடர்பாக அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், டெக்சாஸ் மாகாணம் மிட்லண்டில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், காற்று மாசை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும் என்று மற்ற நாடுகள் கூறி வருவதாக தெரிவித்தார். ஆனால், சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள், அவர்கள் நாடுகளில் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்றார். இது குறித்து பேசிய அவர், அமெரிக்கா காற்று மாசை கட்டுப்படுத்த முறையாக செயல்பட்டு வருவதாகவும், தான் அதிபராக இருக்கும் வரை அமெரிக்கா எப்போதும் முதலிடத்தில்தான் இருக்கும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாக மற்ற நாடுகள் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அமெரிக்காவை முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ‘ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் நம் நாட்டை அழிக்க விரும்புகிறார்கள். கடந்த ஆட்சியின்போது அமெரிக்காவின் எரிசக்தி தொழில் மீது இடைவிடாத தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் நான் பதவியேற்ற பின் அதனை தடுத்து நிறுத்தியுள்ளேன். பருவநிலை மாற்றத்திற்கான பாரிஸ் ஒப்பந்தமானது ஒரு தலைப்பட்சமானது, பேரழிவு மற்றும் அமெரிக்காவின் பல மில்லியன் டாலர் பணத்தை அழிக்கும் நடவடிக்கை. அதனால்தான் அமெரிக்கா அதிலிருந்து வெளியேறியுள்ளது. சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்கா முதன்முறையாக எரிசக்திதுறையில் தன்னிறைவு பெற்று ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது’ என்று ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்தார்.