விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தவர் இலியானா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இலியானாவுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை. 2 இந்தி படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. ஆஸ்திரேலிய இளைஞருடனான காதல் சர்ச்சைகளுக்கு பிறகு டைரக்டர்கள் அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் தனது நீச்சல் உடை படங்களை அவர் பரவ விட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் இலியானா வருத்தத்தில் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“கடந்த 2 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் எனக்கு படங்கள் இல்லை. இந்தியில் மட்டுமே ஓரிரு படங்களில் நடிக்கிறேன். டைரக்டர்கள் என்னை ஒதுக்குகிறார்கள். அதற்கான காரணம் தெரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் இதுதான் எனக்கு கடைசி படம் என்ற உணர்விலேயே நடிக்க வேண்டி உள்ளது.
தென்னிந்திய மொழியில் ஒரு பட வாய்ப்பு வந்தது. டைரக்டர் கதையை சொல்லிவிட்டு நான்தான் கதாநாயகி என்று உறுதி அளித்து விட்டு போனார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த படம் கைநழுவி விட்டது. வேறு ஒரு கதாநாயகியை அதற்கு ஒப்பந்தம் செய்து விட்டனர். அந்த டைரக்டரை போனில் தொடர்பு கொண்டு ஏன் என்னை நீக்கினீர்கள்? என்று கோபப்பட்டேன். அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.
இப்படித்தான் பட வாய்ப்புகள் பறிபோகின்றன. நான் நடித்த அனைத்து படங்களுமே விரும்பி செய்தவைதான். அரை மனதுடன் படங்களை ஒப்புக்கொள்ள மாட்டேன். இந்தியில் பர்பி படம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. ரஷ்டம் படத்தில் அக்ஷய்குமாருடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன்.
காட்சிகளில் நடித்து முடித்ததும் டைரக்டர் முகத்தைதான் பார்ப்பேன். அவர் மகிழ்ச்சியாக இருந்தால் நன்றாக நடித்து இருக்கிறேன் என்ற திருப்தி ஏற்படும். அதுமட்டும் எனக்கு போதும். வெற்றி, வசூல் போன்றவை குறித்து கவலைப்படுவது இல்லை. தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க நல்ல கதைகளை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.”
இவ்வாறு இலியானா கூறினார்.