அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களும் நல்லாட்சியின் மையங்களாக மாற வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தாமரைத் தடாக அரங்கில் நேற்று இடம்பெற்ற ‘சுவர்ண நகரம்’ விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
கடந்த பல தசாப்தங்களில் சில உள்ளூராட்சி நிறுவன அரசியல்வாதிகள் ஊழல், மோசடி, முறைகேடுகளை மேற்கொண்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதன் காரணமாக அவர்களது அரசியல் கட்சிகளும், பிரதிநிதித்துவப்படுத்திய அரசாங்கமும், அவர்களது தலைவர்களும் மக்களால் வெறுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவிக்கு அடுத்தாக கூடுதல் நிறைவேற்று அதிகாரமுடைய உள்ளூராட்சி நிறுவன தலைவர்கள் எப்போதும் தமது அதிகாரத்தை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்த வேண்டும்.
மக்களது பிரச்சனைகளை தேடிச்சென்று அவற்றுக்கு தீர்வு வழங்குவது அரசியல்வாதிகளினதும் அரச அலுவலர்களினதும் பொறுப்பாகும்.
அபிவிருத்தி, நல்லாட்சி, நிதி முகாமைத்துவம், சமூக நலன்புரி செயற்பாடுகள் போன்றவற்றில் உள்ளூராட்சி நிறுவனங்கள் கொண்டிருக்கும் வரையறையற்ற அதிகாரங்கள் மூலம் தமது சேவை சிறப்பினை காட்டுவதற்கு அனைத்து உள்ளூராட்சி நிறுவன அரசியல்வாதிகளும் அரச அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
23 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 271 பிரதேச சபைகளை உள்ளடக்கிய 335 உள்ளூராட்சி நிறுவனங்களின் பலவீனங்கள் மற்றும் சவால்களை இனங்கண்டு, அவற்றை வெற்றிகொள்வதற்கு இந்த திட்டத்தின் ஊடாக வழி காட்டப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.