திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக 2 வருடங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். கடந்த வருடம் திரிஷாவுக்கு பட அதிபருடன் திருமணம் நிச்சயமாகி திடீரென்று ரத்தானது.
இந்த நிலையில் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் பேசப்படுகிறது. வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களுக்கும் இருவரும் ஜோடியாகவே சென்று வந்தார்கள்.
இந்த காதல் கிசுகிசுக்களுக்கு இதுவரை பதில் சொல்லாமல் இருந்த ராணா இப்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“திரிஷாவையும் என்னையும் இணைத்து செய்திகள் வருகின்றன. நாங்கள் காதலிப்பதாக பேசுகிறார்கள். நான் திரிஷாவை காதலிக்கவில்லை. வேறு யாருடனும் எனக்கு காதல் இல்லை. நான் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே தீவிர கவனமாக இருக்கிறேன். வேறு எந்த சிந்தனையும் எனக்கு இல்லை.
தற்போதைய சூழ்நிலையில் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் மற்றவர்கள் போல் இல்லை. எனது வாழ்க்கை முறை அசாதாரணமானது. நான் இந்தி படங்களில் நடிக்கும்போது 6 மாதங்கள் மும்பையிலேயே தங்கி இருக்க வேண்டி வருகிறது. அப்போதெல்லாம் பல மாதங்கள் ஐதராபாத்தில் இருக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது.
அடுத்த வருடம் டி.வி. நிகழ்ச்சிக்காக 3 மாதங்கள் அமெரிக்காவில் தங்க வேண்டி இருக்கிறது. நான் திருமணம் செய்து கொண்டால் இப்படி பல மாதங்கள் வெளியூர்களில் தங்கி இருக்க முடியாது. எனக்கு மனைவியாக வரும் பெண் முதலில் இப்படிப்பட்ட எனது வாழ்க்கை முறைகளை அனுசரித்து செல்ல தயாராக இருக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையில் எனக்கு திருமணம் இல்லை. எப்போதுமே திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பேன் என்று சொல்லவில்லை. ஒரு நிலையான இடத்துக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்வேன்.”
இவ்வாறு ராணா கூறினார்.