சர்வதேச கிரிக்கெட்டில் தனது 15வது ஆண்டை நிறைவு செய்துள்ள சுரேஷ் ரெய்னாவுக்கு அவர் மனைவி உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு தம்பூலாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னுடைய 19வது வயதில் தன்னுடைய முதல் போட்டியில் விளையாடினார் சுரேஷ் ரெய்னா.
சர்வதேச அளவில் சிறப்பான வீரராக திகழும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி சார்பில் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் அதிகமான ரன்களை அடித்த இரண்டாவது வீரராக விராட் கோஹ்லிக்கு அடுத்து இவர் உள்ளார்.
கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் சிறப்பாக விளையாடி சதங்களை விளாசி தள்ளுபவர் சுரேஷ் ரெய்னா. இந்திய அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகளிலும் 226 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் 78 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் 62 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 15வது ஆண்டை நேற்றைய தினம் பூர்த்தி செய்துள்ளார் சுரேஷ் ரெய்னா. இதையொட்டி சக வீரர்கள் பாராட்டு தெரிவித்த நிலையில், ரெய்னாவின் மனைவி பிரியங்கா, உணர்வுபூர்வமான மெசேஜை தனது டிவிட்டர் பக்கத்தில் அளித்துள்ளார்.
அதில், தன்னுடைய விளையாட்டிற்கு எவ்வளவு உண்மையாக ரெய்னா இருக்கிறார் என்பதையும் எவ்வளவு தூரம் கடின உழைப்பை தருகிறார் என்பதையும் பிரியங்கா தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரசிகர்கள் ரெய்னாமீது செலுத்தும் அன்பால் அவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் அவர் தெரிவித்துள்ளார். ரெய்னாவை நினைத்து தான் மிகவும் பெருமை அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.