வடக்கு கிழக்கு என்ற எங்களின் மரபு வழி. தாயக மண்ணும் சமஸ்டி என்ற அடிப்படையிலான தீர்வும் எங்களுடைய இறைமை என்பன உள்ளடக்கப்படாத ஒரு தீர்வை நாங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்திலுள்ள மக்களின் தேவைகள் பற்றியும் சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் அண்மையில் முழங்காவில் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதை கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கான ஒரு சூழல் ஏற்பட்டு 2016ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவு கூர்ந்திருக்கின்றோம்.
இது எல்லோருடைய கூட்டு முயற்சியாகவும் அமைந்துள்ளது. இதை பலர் விமர்சிக்கலாம் இவற்றைப் பற்றி எழுதலாம்.
ஆனால் நாங்கள் தெளிவான ஓர் நேரான பாதையில் தான் பயணிக்கின்றோம்.
நாங்கள் ஒரு தேச விடுதலைக்காக போராடுகின்ற இனம். அதில் நாங்கள் போராளிகளாக இருக்கின்றோம். அந்த பாதையில் எங்களுடைய பாதங்களை நாங்கள் சரியாக வைக்கின்றோம்.
காழ்புணர்ச்சிகள் இயலாமைகள் சிலருக்கு இதில் இருக்கின்ற விரக்திகள் அதைப்பற்றி அவர்களை எழுதத் தூண்டலாம். நாங்கள் அதைப் பற்றி கவலைப்படத்தேவையில்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பகுதிகளில் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ள களவுப்பிரச்சினைகள் மிக முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது.
இதனைத் தடுப்பதற்கு எங்கள் எல்லோரிடத்திலும் விழிப்புணர்வு கூட்டுப்பொறுப்பு என்பன மிக முக்கியமாக இருக்கவேண்டும்.
அதன் மூலம் தான் இதனை கட்டுப்படுத்த முடியும். நாங்கள் தெளிவாக ஒற்றுமையாக பலமாக இருக்கும் போது தான் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க முடியும் என்றும் வடக்கு கிழக்கு என்ற மரபு வழித் தாயகம் எங்களிடம் இல்லாமல் போய்விடுமா? சுய நிர்ணய உரிமை இறைமை எல்லாம் இல்லாமல் போய் விடுமா? என்ற பல சந்தேகங்கள் மக்களிடம் உள்ளது.
ஆனால் நாங்கள் கட்சி ரீதியாக மக்களிடம் ஆணை கேட்டது வடக்கு கிழக்கு இணைந்த தாயக மண்ணில் சமஸ்டி அடிப்படையில் எங்களின் இறைமையின் அடிப்படையில் எங்களுக்கான ஒரு தீர்வை பெற்றுக்கொள்கின்ற கொள்கைகளுக்காக வாக்களிக்குமாறு கேட்டிருந்தோம்.
யாருக்கும் வேலை பெற்றுத்தருவதாகவோ அல்லது உதவி செய்வதாகவோ நாங்கள் வாக்குக் கேட்கவில்லை என்பது எல்லோருக்குமே தெரியும்.
2009ஆம் ஆண்டின் பின்னர் விடுதலைப்புலிகள் இல்லாத போதும் அவர்களினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்வதே எங்களின் இலக்கு. இந்த இலக்கில் இருந்து சிறிதளவும் நாங்கள் மாறிப்போகவில்லை.
இதில் யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. வடக்கு கிழக்கு என்ற எங்களது மரவு வழி தாயக மண்ணும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வும் எங்களது இறைமை என்ற விடயம் உள்ளடக்கப்படாத எந்தத் தீர்வையும் நாங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என சிறிதரன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.