பிரித்தானியாவில் 20 வயதுடைய இளம் பெண் அளித்த வன்கொடுமை குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம்சாட்டிய பெண் முன்னாள் பாராளுமன்ற ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், எம்.பி. தன்னைத் தாக்கியதாகவும், தன்னை தவறு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது என குற்றசாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜூலை 31ம் திகதி அன்று பாலியல் குற்றங்கள் மற்றும் தாக்குதல் என நான்கு தனித்தனியான சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளைப் பெற்றதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த குற்றங்கள் ஜூலை 2019 முதல் ஜனவரி 2020 வரை வெஸ்ட்மின்ஸ்டர், லம்பேத் மற்றும் ஹாக்னியில் உள்ள முகவரிகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக 50 வயதான கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி சந்தேகத்தின் பேரில் ஆகஸ்ட் 1ம் திகதி அன்று கைது செய்யப்பட்டார்.
தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள எம்.பி, ஆகஸ்ட் நடுப்பகுதியில் விசாரணைக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து குற்றச்சாட்டுகளையும் நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த விஷயம் இப்போது காவல்துறையினரின் கைகளில் இருப்பதால், மேலும் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது என கன்சர்வேடிவ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.