பிரதமர், மஹிந்த ராஜபக்ச மற்றும் எதிர்கட்சி தலைவருடன் விஷேட பேச்சுவார்த்தையில் அண்மையில் நாம் ஈடுபட்டோம்.
இதன் போது ஒற்றையாட்சிக்கு பங்கம் ஏற்படுத்தி, பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படாத புதிய அரசியல் யாப்பிற்கு எப்போதும் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்பதை தீர்மானமாக தெரிவித்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
பௌத்தத்திற்கான முன்னுரிமை, பிரதமரைத் தேர்வு செய்யும் முறை, எதிர்கட்சி தலைவரை தேர்வு செய்யும் முறை, மற்றும் தேசிய பாதுகாப்பு, தேர்தல் முறை போன்ற முக்கிய விடயங்கள் பற்றி அரசிற்கு தெரியப்படுத்தி உள்ளோம்.
இவற்றை உள்ளடக்கிய 14 விடயங்களை பற்றி ஆலோசிக்கப்பட வேண்டும் என அரசிற்கு தெளிவு படுத்தியுள்ளோம்.
இவற்றை தாண்டி நாம் ஒருபோதும் எமது நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டோம் என்பது உறுதி. இப்போது கொண்டு வரப்பட உள்ள அரசியல் யாப்பு நாட்டிற்கு பாரதூரமான விளைவினை ஏற்படுத்தும்.
பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்ற வகையில் அடுத்த ஆட்சியை அமைத்துக் கொள்ளும் வகையில் மஹிந்த தலைமையில் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.
வரலாற்றில் எப்போதும் இடம் பெறாத வகையில் இலங்கையே இலங்கைக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து ஜெனிவாவில் தீர்மானம் என்று கொண்டு வந்தது இவ்வாறான ஓர் விடயம் இந்த ஆட்சியிலேயே நடைபெற்றது.
மற்றொரு பக்கம் இலங்கையின் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றது. இவற்றை எதிர்க்க நாம் தயாராகவே இருக்கின்றோம் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஓர் கட்சியாக நாம் செயற்பட்டு வருகின்றோம்.
பெயருக்கு மட்டும் ஒற்றையாட்சி என்று இருந்தால் போதாது நீதி மற்றும் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் ஓர் ஒற்றையாட்சி நடைபெற வேண்டும்.
எதிர்வரும் ஜனவரி மாதம் எதிர்காலத்தில் நாட்டுக்கு ஏற்படப்போகும் பாதிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் செய்யப் போகின்றோம் எனவும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.