முகப்பருக்களால் ஆண்களும், பெண்களும் படும் அவஸ்தைக்கு அளவே இல்லை. அதை போக்க வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர். அதுவும், பருக்கள் ஏற்படுத்திச் சென்ற வடுக்களை போக்க, இளம் வயதினர் படும் பாடு சிறிதல்ல. பரு வந்தால் சிறிது நாட்களில் போய் விடும்.
“டிவி’ பார்க்கும் போது அதை நகத்தால் கிள்ளி பாடாய்படுத்துவதால், வடுக்களை நிரந்தரமாக விட்டுச் செல்கிறது. சிறிது நாட்களில் தானாக மறையும் பருவை கிள்ளாமல் இருந்தால், வாழ்நாள் முழுவதும் முகம் பளிச்சென்று இருக்கும்.
சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் பாக்டீரியாக்கள் தாக்கும்போது முகப்பருக்கள் வருகின்றன. இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு முகப்பருவை போக்க முடியும். குறிப்பாக, சுத்தமான தேனை பயன்படுத்தி முகப்பருக்களைப் போக்கலாம் என்பது தெரியுமா?
கற்றாழை மற்றும் தேன் மாஸ்க்: கற்றாழையுடன், தேன் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகப்பருக்களை தடுக்கலாம். அவகேடோவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக, சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இந்த பழம் மிகவும் நல்லது.
சர்க்கரை மற்றும் தேன்: சர்க்கரையுடன் தேன் கலந்து, முகத்தை மென்மையாக ஸ்கிரப் செய்தால், சருமத்துளைகளில் உள்ள அடைப்புகள் மற்றும் அழுக்குகள் முற்றிலும் நீங்கி, எண்ணெய் பசையின் சுரப்பும் குறைந்து, பருக்கள் வருவது தடுக்கப்படும்.
ஓட்ஸ் மற்றும் தேன் மாஸ்க்: ஓட்ஸ், உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. தேனை ஓட்ஸ் பொடியுடன் சேர்த்து, முகத்தில் மாஸ்க் போட்டு வந்தால், அவை பருக்களை போக்குவதோடு, அதனால் ஏற்படும் வடுக்களையும் தடுக்கும்.
ஸ்ட்ராபெர்ரி மற்றும் தேன் மாஸ்க்: ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அதனை கொண்டு சருமத்தைப் பராமரித்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெறும். அதிலும், ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதனுடன் தேன் கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
பால் மற்றும் தேன் மாஸ்க்: பாலுக்கு சருமத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. எனவே தேனுடன் பாலை சிறிது சேர்த்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், பருக்கள் மறையும்.
பட்டை மற்றும் தேன் மாஸ்க்: தேனில் ஆன்டி-பாக்டீரியல் தன்மையும், பட்டையில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மையும் இருப்பதால், இவற்றைக் கொண்டு, முகத்திற்கு மாஸ்க் போட்டால், பருக்கள் மறையும். பட்டை பொடியுடன் தேனை கலந்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவி உலர வைத்து கழுவினால், பருக்கள் காணாமல் போய்விடும். இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது.